×

தமிழகத்தில் வரும் 8ம்தேதி கோயில்கள் திறப்பு: பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பது எப்படி? நெறிமுறை வகுக்க விளக்க வீடியோ பதிவு அரசிடம் அளிப்பு

சென்னை: தமிழகத்தில் வரும் 8ம் தேதி முதல் முக்கிய கோயில்கள் திறக்கப்பட உள்ளன. இந்த கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிப்பது தொடர்பாக வழிகாட்டி நெறிமுறையை வகுக்க விளக்க வீடியோ பதிவு செய்து தமிழக அரசுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.  தமிழகத்தில் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடுவதை தவிர்க்கும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள கோயில்களில் பக்தர்கள் தரிசனத்துக்கு தடைவிதிக்கப்பட்டது. அதேநேரத்தில் கோயில்களில் அர்ச்சகர்கள் மூலம் பூஜைகள் நடந்து வருகிறது.   இந்நிலையில் ஆன்லைன் மூலம் இலவச மற்றும் கட்டண தரிசனம் என்று பிரித்து முன்பதிவு செய்யப்படுகிறது. இதற்காக கட்டணமாக ரூ.50 முதல் ரூ.500 வரை பெறப்படுகிறது.

வரும் 8ம் தேதி முதல் கோயில்களை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதை தொடர்ந்து திருப்பதி கோயில் உட்பட நாடு முழுவதும் உள்ள முக்கிய கோயில்கள் திறக்கப்பட உள்ளன. தமிழகத்தில் முதற்கட்டமாக சென்னையில் மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு காமாட்சியம்மன் உட்பட 150 முக்கிய கோயில்களை திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்த கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறைகள் வகுக்கப்படுகிறது. இதற்காக, கமிஷனர் பணீந்திர ரெட்டி உத்தரவின் பேரில் கூடுதல் ஆணையர் திருமகள், பார்த்தசாரதி கோயில் உதவி ஆணையர் ஜெயப்பிரியா தலைமையிலான குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி, மயிலாப்பூர் கபாலீஸ்வரர், திருவொற்றியூர் தியாகராஜசுவாமி, வடபழனி முருகன் உட்பட முக்கிய கோயில்களில் விளக்க வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளது.

அதாவது, கோயில்களுக்கு வெளியே பக்தர்கள் காலணியை கழட்டுவதில் தொடங்கி, முகக்கவசம் அணிந்து பக்தர்கள்  ேகாயில்களுக்கு வரும் முன்பு சோப், சானிடைசர் பயன்படுத்தி கையை கழுவுவது, கோயில்களில் வரும் பக்தர்கள் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்வது, கோயில்களில் பக்தர்கள் வரிசையில் நிற்கும் போது, 1 மீட்டர் சமூக இடைவெளி விட்டு கட்டம் போடப்பட்டிருப்பது தொடர்பாக விளக்க வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும், கோயில்களுக்கு வரும் பக்தர்கள் அப்படியே வெளியே போகும் வரை செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும் அதில் பதிவு செய்யப்பட்டது. இந்த வீடியோவை கமிஷனர் பணீந்திர ரெட்டி முதல்வர் எடப்பாடியிடம் சமர்ப்பித்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த வீடியோவை அடிப்படையாக வைத்து கோயில்களுக்கு வரும் பக்தர்கள் பின்பற்ற வேண்டிய வழிகாட்டி நெறிமுறை வகுக்கப்பட இருப்பதாக அறநிலையத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


Tags : Temples ,Opening ,Tamil Nadu ,government , Temples, Temples Opening, Devotees Darshan, Video recording
× RELATED கோயில்களில் நாளை முதல் பக்தர்களுக்கு...