×

தீவிர புயலாக மாறியது 'நிசர்கா'; மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ரெட் அலர்ட் எச்செரிக்கை; மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படக்கூடும்...இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: அரபிக்கடலில் உருவான நிசர்கா புயல் காரணமாக மகாராஷ்டிரா, குஜராத்திற்கு ரெட் அலர்ட் எச்செரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நிசர்கா புயலால் மும்பையில் அதிக பாதிப்பு ஏற்படும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள புயல் எச்சரிக்கையில் கூறியதாவது;  கிழக்கு மத்திய அரபிக்கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு திசையில் மணிக்கு 11 கிலோ மீட்டர் வேகத்தில் கடந்த 7 மணி நேரமாக நகர்ந்து, தீவிரமடைந்து ‘நிசர்கா’ புயலாக மாறியுள்ளது.

இந்தப் புயல் இன்று கிழக்கு மத்திய அரபிக்கடலில் அட்சரேகை 15.6 டிகிரி வடக்கு, தீர்க்கரேகை 71.2 டிகிரி கிழக்கு அருகே பாஞ்சிமுக்கு மேற்கு-வடமேற்கில் 280 கிலோ மீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கு-தென்மேற்கில் 430 கிலோ மீட்டர் தொலைவிலும் , சூரத்துக்கு தெற்கு-தென்மேற்கில் 640 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டிருந்தது. அடுத்த 10 மணி நேரத்தில் இது மேலும் தீவிரமடைந்து தீவிரப் புயலாக மாறக்கூடும். இதனால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்படுகிறது. அடுத்த சில மணி நேரத்தில், இது வடக்கு திசையில் நகர்ந்து, பின்னர் வளைந்து வடக்கு - வடகிழக்கு திசையில் பயணித்து, வடக்கு மராட்டியம், அதையொட்டியுள்ள தெற்கு குஜராத் கரையோரத்தில், ஹரிஹரேஸ்வர் மற்றும் டாமனுக்கு இடையே அலிபாக் அருகே ஜூன் 3-ஆம்தேதி பிற்பகலில் தீவிரப் புயலாக அதிகபட்சம் மணிக்கு 100 - 110 கிலோ மீட்டர் முதல் 120 கிலோ மீட்டர் வரை வேகத்தில் கரையைக் கடக்கும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குஜராத்தில் தேசிய பேரிடர் மீட்புப் படையின் 11 குழுக்கள், மகாராஷ்டிரத்தில் 10 குழுக்கள், மற்ற இடங்களில் 2 குழுக்கள் களமிறக்கப்பட்டுள்ளன. ஆங்காங்கே பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் மரங்கள் சாய்ந்துவிழுந்தன. கொரோனா வைரஸ் நெருக்கடியை மகாராஷ்டிரா, குஜராத் அரசுகள் எதிர்கொண்டுள்ள நிலையில், ஆயிரக்கணக்கான நோயாளிகள் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நேரத்தில் மின் துண்டிப்பு ஏற்படாமல் இருக்க, இருமாநில அரசுகளும் ஒருங்கிணைந்து செயல்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Tags : storm ,Nisarga ,Gujarat ,Maharashtra ,MUMBAI ,Indian Meteorological Department , Puyala, Nisarga, Maharashtra, Gujarat, Red Alert, Indian Meteorological Center
× RELATED சி.எஸ்.கே – குஜராத் அணிகள் மோதும் போட்டி: டிக்கெட் விற்பனை தொடக்கம்