×

பொருட்காட்சி திடல் வணிக வளாக கட்டுமான குழியில் விழுந்த கன்றுகுட்டி மீட்பு

நெல்லை: நெல்லை பொருட்காட்சி திடலில் நடந்து வரும் வணிக வளாக கட்டுமான குழியில் விழுந்த கன்று குட்டியை காய்கறி கடை வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் மீட்டனர். நெல்லையில் கொரோனா பரவல் மற்றும் பொதுமக்கள் கூட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் மாநகராட்சி உத்தரவின் பேரில் டவுன் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் மார்க்கெட் காய்கறி கடைகள், பொருட்காட்சி திடலுக்கு மாற்றம் செய்யப்பட்டு இயங்கி வருகிறது. இங்கு நெல்லை டவுன், பேட்டை, தச்சநல்லூர், மேலப்பாளையத்தை சேர்ந்த மக்கள் தினமும் வந்து காய்கறிகளை வாங்கி செல்கின்றனர். இந்த மார்க்கெட்டில் இருந்துதான் மாநகர பஸ்களும் இயக்கப்படுகின்றன.

தற்போது 50 சதவீத பஸ்களை இயக்கலாம் என்ற அரசின் உத்தரவை அடுத்து பஸ்கள் இங்கு வந்து பயணிகளை ஏற்றி செல்கின்றன. மேலும் காய்கறி கடைகளுக்கும் வாகனங்கள் அதிகளவு வருகின்றன. இந்நிலையில் பொருட்காட்சி திடலில் கோவை கொடீசியா வணிக வளாகத்தை போன்று பல கோடி செலவில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் வணிக வளாகம் கட்டுமான பணியும் தொடங்கப்பட்டு உள்ளது. இதற்காக சுமார் 10 அடி ஆழத்தில் கட்டுமான பணிக்காக தோண்டப்பட்டிருந்த குழியில் நேற்று காலையில் கன்று விழுந்து தண்ணீரில் தத்தளித்தது. கன்றை தேடிய தாய் பசுவும் வெளியே நின்று கதறியது.

இதனை கண்டு பரிதாபப்பட்ட காய்கறி கடை வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்கள், தண்ணீர் தேங்கி கிடந்த குழிக்குள் இறங்கி கயிறுகட்டி கன்றுகுட்டியை மீட்டனர். பின்னர் தண்ணீர் ஊற்றி சகதியை கழுவி விட்டதும், கன்று தாயை தழுவி சென்றது. வியாபாரிகள் மற்றும் சுமைதூக்கும் தொழிலாளர்களின் இந்த மனிதாபிமான செயலை கண்டு பொதுமக்கள் பாராட்டினர்.

Tags : Exhibition , Construction pit, calf, rescue
× RELATED எம்பி திருநாவுக்கரசர் பேட்டி...