திருச்செந்தூர் பஸ்சில் நின்று கொண்டு பயணித்தனர்; நாகர்கோவில் பஸ்சில் கட்டுக்கடங்காத கூட்டம்: புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் திண்டாட்டம்

நெல்லை: பொது போக்குவரத்தின் 2வது நாளான நேற்று போதிய பஸ்கள் இன்றி நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பயணிகள் திகைத்தனர். நாகர்கோவில் பஸ்சில் மொத்தமாக 80 பேர் ஏறியதால், பஸ்சை இயக்குவதில் பிரச்னை ஏற்பட்டது. கொரோனா பாதிப்பில் ஊரடங்கு தளர்வு காரணமாக நேற்று முதல் பொதுபோக்குவரத்தை இயக்கிட தமிழக அரசு முன்வந்தது. அதற்காக பஸ் போக்குவரத்து நடத்திடும் வகையில் மொத்தம் 8 மண்டலங்கள் பிரிக்கப்பட்டு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. நெல்லை மண்டலத்தில் தென்காசி, நெல்லை, குமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்கள் இடம் பெற்றுள்ளன.

பஸ் போக்குவரத்தின் முதல் நாளான நேற்று பயணிகள் பஸ்சில் செல்ல ஆர்வம் காட்டவில்லை. பஸ்சில் ஏறி சென்றால் திரும்ப, மாற்று பஸ்கள் கிடைக்குமா என்ற சந்தேகமும் நிலவியது. இந்நிலையில் 2வது நாளான இன்று முக்கிய நகரங்களுக்கு பஸ்களில் நிலைமை தலைகீழாக மாறியது. குறிப்பாக நெல்லை புதிய பஸ் நிலையத்தில் இருந்து நாகர்கோவிலுக்கு செல்ல கூட்டம் அலைமோதியது. நேற்று காலை 8 மணிக்கு நாகர்கோவில் செல்ல ஒரு பஸ் இயக்கப்பட்ட நிலையில், அதில் மொத்தம் 80 பேர் ஏறினர். இதனால் கண்டக்டர், டிரைவர் திகைத்தனர். 30 பயணிகளை கொண்டே பஸ்களை இயக்க முடியும் என அவர்கள் தெரிவித்தனர்.

பஸ்சில் இருந்து பயணிகள் யாரும் இறங்குவதாக தெரியவில்லை. சுமார் 40 நிமிடங்கள் போராட்டத்திற்கு பின்னர் நாகர்கோவிலில் உள்ள போக்குவரத்து அதிகாரிகளுடன் கண்டக்டர் பேசி, மாற்று வழிமுறைகளை கேட்டறிந்தார். கடைசியில் வேறு வழியின்றி சுமார் 70 பயணிகளுடன் அந்த பஸ் நாகர்கோவிலுக்கு புறப்பட்டு சென்றது. திருச்செந்தூரில் இருந்து நெல்ைலக்கு வந்த அரசு பஸ்சிலும் இதே நிலை காணப்பட்டது. அப்பஸ்சில் சுமார் 60 பேர் ஏறிய நிலையில், சில பயணிகள் நின்றுகொண்டே பயணித்தனர். சமூக இடைவெளியை காரணம் காட்டியதால், பஸ்சில் சிறு தகராறும் ஏற்பட்டது.  

நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பிற நகரங்களுக்கு இயக்கப்பட்ட பஸ்களிலும் இன்று ஓரளவுக்கு கூட்டம் இருந்தது. பயணிகள் சகஜமாக பஸ் ஏற வர தொடங்கிய நிலையில், புதிய பஸ் நிலையம் காய்கறி மார்க்கெட் தூசிகளால் நிரம்பி வழிந்தது. ஒரு பக்கம் காய்கறி லாரிகளும், மறுபக்கம் பஸ்களும் அங்குமிங்கும் காணப்பட்டது. காய்கறி கடைகளும், அதன் குப்பைகளும் ஆங்காங்கே பரவி கிடந்ததால், பஸ் ஏற வந்த பயணிகளும், வியாபாரிகளும் சிரமப்பட்டனர்.

Related Stories:

>