×

திருவட்டார் பகுதியில் வெட்டுக்கிளிகளை அழிக்க விவசாயிகளுக்கு பயிற்சி: அலுவலர்கள் செய்முறை விளக்கம்

குலசேகரம்:  இந்தியாவில் வடமாநிலங்களில் ஒருவகை பாலைவன வெட்டுக்கிளிகள் படையெடுத்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. இந்நிலையில் இருதினங்களுக்கு முன் குமரி மாவட்டத்தில் ஒருவகை வெட்டுக்கிளிகளின் தாக்குதல் கண்டறியப்பட்டது.  திருவட்டார் அருகே வெட்டுக்குழி, முளவிளை போன்ற பகுதிகளில் தோட்டங்களில் வாழை இலைகளை அவை அரித்து தின்றிருந்தன. இதுபோல் ரப்பர் மரங்கள், ரப்பர் கன்றுகள், அன்னாசி தோட்டம், மரவள்ளிக்கிழங்கு, தேக்கு மரங்கள் போன்றவற்றிலும் ஏராளமான வெட்டுக்கிளிகள் இருப்பது தெரியவந்தது. தகவல் அறிந்ததும் கலெக்டர் உத்தரவின் பேரில் திருப்பதிசாரம் வேளாண்மை அறிவியல் மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் திருகுமரன் மற்றும் வேளாண் துறை, தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் வந்து சோதனை செய்தனர். மேலும் வெட்டுக்கிளிகளை படமெடுத்து கோவை வேளாண். பல்கலைக்கழக பூச்சியியல் துறைக்கு அனுப்பினர். பூச்சியியல் துறை ஆய்வில் அவை பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை சாதாரண வெட்டுக்கிளி எனத்தெரியவந்தது. கேரள மாநிலத்தில் உள்ள காப்பி தோட்டங்களில் இருக்கும் இவ்வகை வெட்டுக்கிளிகள் காப்பி வெட்டுக்கிளி என்று அழைக்கப்படுவதாக அவர்கள் தெரிவித்தனர். இதனால் விவசாயிகள் நிம்மதி அடைந்தனர்.

இந்நிலையில் இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து நேற்று மாலை குமரி மாவட்ட தோட்டக்கலைத்துறை துணை இயக்குநர் மாலதி, மாவட்ட ஆட்சித்தலைவரின் நேர்முக உதவியாளர் குணபாலன், வேளாண்துறை உதவி இயக்குநர் ஆறுமுகம், தோட்டக்கலைத்துறை உதவி இயக்குநர் சுந்தர் டேனியல் பாலஸ் மற்றும் வேளாண்மை துறை தோட்டக்கலைதுறையினர் அந்த பகுதிக்கு சென்று வெட்டுக்கிளிகள் பரவலை தடுப்பது குறித்து செயல்முறை விளக்கம் அளித்து விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தனர். வெட்டுக்கிளிகள் பரவலை வேம்பு கரைசல் மூலம் தடுக்கலாம். இதற்காக வேம்பில் இருந்து தயாரிக்கப்பட்ட பூச்சிக்கொல்லி மருந்து ஒன்றை ஒரு லிட்டர் தண்ணீரில் 2 மிலி கலந்து செடிகள் மற்றும் மரங்களில் தெளித்து செயல்முறை விளக்கம் அளித்தனர். தொடர்ந்து அந்த மருந்தை விவசாயிகள் வாங்கி வெட்டுக்கிளிகள் பரவி உள்ள பகுதிகளில் தெளிக்குமாறு கேட்டுக்கொண்டனர்.

Tags : grasshoppers ,Thiruvattar , Training ,farmers , clear grasshoppers ,Thiruvattar: Officers' Procedure
× RELATED திருவட்டார் அருகே கல் ஏற்றி வந்த டெம்போ பறிமுதல்