×

வெற்று அறிவிப்பாய் போன தடை உத்தரவு ஏற்காட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளால் பீதி: 400 வாகனங்களை திருப்பி அனுப்பிய போலீசார்

ஏற்காடு: ஏற்காட்டிற்கு படையெடுக்கும் சுற்றுலா பயணிகளால் நோய் தொற்று அபாயம் உள்ளதாக ஏற்காடு வாசிகள் புகார் தெரிவித்ததையடுத்து, விடுதிகளில் தங்கியுள்ளவர்களை போலீசார் வெளியேற்றி வருகின்றனர். சுற்றுலா தலங்களுக்கு செல்ல அரசு தடை விதித்துள்ள நிலையில், சுற்றுலா தலமான ஏற்காட்டில் இதுவரை யாருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. இந்நிலையில், அரசின் தடை அறிவிப்பை மீறி ஏற்காட்டிற்கு அதிகளவில் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் டவுன் பகுதியை தவிர்த்து கிராம பகுதிகளில் உள்ள விடுதிகளில் தங்கி, அங்குள்ள அண்ணா பூங்கா சாலையில் உள்ள தள்ளுவண்டி கடைகள் மற்றும் ஏரிக்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் சுற்றுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். இதனால், கொரோனா தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால் அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.இதையடுத்து, அப்பகுதி மக்கள் போலீசாருக்கு புகார் தெரிவித்ததையடுத்து, நேற்று அதிகாலை முதல் ஏற்காடு அடிவார சோதனை சாவடியில், வாகன சோதனையை போலீசார் துரிதப்படுத்தி, ஏற்காட்டை சேர்ந்தவர்ளுக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டது. நேற்று காலை முதல் ஏற்காடு செல்ல முயன்ற 400க்கும் மேற்பட்ட வாகனங்களை போலீசார் திருப்பி அனுப்பினர். வாகன சோதனையை சேலம் ரூரல் டிஎஸ்பி உமாசங்கர் பார்வையிட்டார்.

இந்நிலையில், ஏற்காடு 5 ரோடு பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் சிலர் மக்களுக்கு நிவாரணம் மற்றும் மருந்து பொருட்கள் வழங்க வந்திருப்பதாக கூறி தங்கியிருந்தனர். நேற்று முன்தினம் மாலை விடுதிக்கு அருகில் வசிக்கும் பிரபாகரன் என்பவர், ஊரடங்கின் போது எதற்காக விடுதியில் தங்கியுள்ளீர்கள்? என அவர்களிடம் விசாரித்து, இதுகுறித்து ஏற்காடு போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து, அங்கு வந்த போலீசார் விடுதியில் தங்கியிருப்பவர்களை, காலி செய்ய கூறிவிட்டு அங்கிருந்து சென்றனர். இந்நிலையில், நேற்று காலை பிரபாகரனின் தாயாருக்கும் விடுதியில் தங்கியிருப்பவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து வந்த ஏற்காடு போலீசார், இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, விடுதியில் தங்கியிருந்தவர்களை சேலத்திற்கு அனுப்பி வைத்தனர். ஏற்காடு ஒன்றியத்தில் இதுவரை கொரோனா தொற்று இல்லாத நிலையில், சுற்றுலா பயணிகளால் நோய் தொற்று அபாயம் உள்ளதால், ஏற்காடு டவுன் மற்றும் கிராமப்பகுதிகளில் உள்ள விடுதிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தி அங்கு தங்கியுள்ளவர்களை வெளியேற்ற வேண்டும் என ஏற்காடு மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Yakkakotta ,announcement ,panic ,Yakkaduwa , Tourists invading, empty announcement,Police return 400 vehicles
× RELATED அஞ்சாமை விமர்சனம்