×

நெல்லை அரசு மருத்துவமனை புதிய சாதனை ஒரே மாதத்தில் 837 பிரசவம் பார்த்த டாக்டர்கள்: கொரோனா இருந்தவர்களும் குழந்தை பெற்று திரும்பினர்

நெல்லை: நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வரலாற்றில் ஒரே மாதத்தில் அதிகபட்சமாக 837 பிரசவம் வெற்றிகரமாக நடந்துள்ளது. கொரோனா அறிகுறிகள் இருந்தவர்களும் பிரசவித்து குணமாகி சென்றதால் மருத்துவர்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர். நெல்லை தென்காசி, தூத்துக்குடி உள்ளிட்ட தென்மாவட்ட ஏழை மக்களுக்கு சிகிச்சை அளிக்கும் மையமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை உள்ளது. இங்கு உள்ள தனி பிரசவ வார்டில் நாள் தோறும் சராசரியாக 20 பிரசவங்கள் நடைபெற்று வந்தன. பல ஆண்டுகளாக இந்த சராசரி நிலை நீடித்து வந்தது. இந்நிலையில் கடந்த மார்ச் 24ம் தேதி 144 தடை உத்தரவுக்கு பின்னர் இந்த மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பிரசவிக்கும் தாய்மார்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.குறிப்பாக கடந்த மே மாதத்தில் மட்டும் 837 பிரசவங்கள் நடந்துள்ளன. இது இந்த மருத்துவமனையில் ஒரு மாதத்தில் நடந்த அதிகபட்ச பிரசவ எண்ணிக்கையாகும். இது ஒரு புதிய சாதனை எண்ணிக்கையாக கருதப்படுகிறது.

இதற்கு முன்னர் அதிகபட்சமாக ஒரு மாதத்தில் 600 முதல் 700க்குள்பட்ட எண்ணிக்கையிலேயே பிரசவங்கள் நடந்துள்ளன. மே மாதம் தினமும் சராசரியாக 25 பிரசவங்கள் நடந்துள்ளன. ஒரே நாளில் அதிகபட்சமாக 34 பிரசவம் பெண் மருத்துவ சிகிச்சை நிபுணர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 837 பிரசவங்களில் 354 பிரசவங்களில் அறுவை சிகிச்சை மூலம் குழந்தைகள் பிறந்துள்ளன. மற்ற அனைத்து குழந்தைகளுமே இங்கு சுகப்பிரசவமாக பிறந்தது குறிப்பிடத்தக்கதாகும். நாளொன்றுக்கு சராசரியாக 10 அறுவை சிகிச்சை பிரசவங்கள் டாக்டர்களால் கவனிக்கப்பட்டன. இதுவும் ஒரு சாதனையாக கருதப்படுகிறது. மே மாதம் இங்கு பிரசவித்த பெண்களில் கொரானா பாதிப்பு அல்லது கொரோனா அறிகுறி உள்ள கர்ப்பிணிகள் ஆறு பேரும் சிகிச்சைக்காக வந்தனர். அவர்கள் தனி வார்டுகளில் வைத்து கவனிக்கப்பட்டு கொரோனாவில் இருந்து மீண்டு நலமாக பெற்றெடுத்த குழந்தையுடன் வீடு திரும்பியுள்ளனர். கொரோனா அச்சத்தையும்  மீறிப் பணியாற்றிய மருத்துவப் பணியாளர்களுக்கு டீன் டாக்டர் ரவிச்சந்திரன், துணை முதல்வர் சாந்தாராம், உறைவிட மருத்துவ அலுவலர் ஷியாம் மற்றும் துறைத் தலைவர்கள் டாக்டர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

காரணம் என்ன?
கொரோனா காரணமாக தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் பிரசவம் பார்ப்பது தவிர்க்கப்பட்டது. இதன் காரணமாக ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினரும், ஓரளவு வசதி உள்ளவர்களும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த 2 மாதமாக அதிக அளவில் பிரசவ வார்டுகளில் சேர்க்கப்பட்டு செலவு ஏதுமின்றி குழந்தை பெற்றெடுத்துள்ளனர்.

Tags : Doctors ,deliveries ,Corona ,residents ,baby , Doctors ,837 deliveries,single month,Corona
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...