×

பழுதடைந்த சோலார் விளக்குகளால் இருளில் மூழ்கும் மலைக்கிராமங்கள்

* இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதி மாவட்ட நிர்வாகம் கவனிக்குமா?

வருசநாடு: மேகமலை ஊராட்சியில் சோலார் விளக்குகள் பழுதடைந்துள்ளதால், 9 மலைக்கிராமங்கள் இருளில் மூழ்கியுள்ளன. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வருசநாடு அருகே, மேகமலை ஊராட்சியில் அரசரடி, பொம்மராஜபுரம், இந்திரா நகர், நொச்சி ஒடை, வெள்ளிமலை, குழிக்காடு, மேலபொம்மராஜபுரம், வடக்கு அரசரடி, பொம்மக்கடவு ஆகிய 9 மலைக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் தெருக்களில் அமைக்கப்பட்ட சோலார் விளக்குகளும், வீடுகளுக்கு வழங்கப்பட்ட சோலார் விளக்குகளும் பழுதாகி எரியாமல் உள்ளன. இதனால், இரவு நேரங்களில் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர். வீட்டு வேலைகலை பகலில் செய்து முடிக்க வேண்டியுள்ளது என்கின்றனர். இது குறித்து மேகமலை ஊராட்சி நிர்வாகத்திடம் தெரிவித்தும் நடவடிக்கை இல்லை என்கின்றனர்.

இது குறித்து பேச்சியம்மாள் (60), உமா (30) ஆகியோர் கூறுகையில், ‘பல தலைமுறைகளாக மலைக்கிராமங்களில் வசித்து வருகிறோம். சோலார் விளக்குகள் பழுதடைந்துள்ளதால், இரவு நேரங்களில் குழந்தைகள் அழுதால் கூட, அவர்களை கவனிக்க முடியவில்லை. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேகமலை ஊராட்சி தலைவர் பால்கண்ணன் கூறுகையில், ‘சோலார் விளக்குகள் நான் பதவிக்கு வருவதற்கு முன்பே பழுதாகி விட்டன. இது குறித்து அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்துள்ளேன். விரைவில் சோலார் விளக்குகள் வழங்குவதாக தெரிவித்துள்ளனர். அனைத்து மலைக் கிராமங்களுக்கும் சோலார் விளக்குகள் வழங்க கலெக்டரும், தமிழக முதல்வரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Tags : Mountains , Mountains lurking , dark,faded solar lights
× RELATED தி.மலையில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 13 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!!!