×

கடும் கட்டுப்பாடுகளுக்கிடையே 37 பேர் பாதிப்பு சிறைகளுக்குள் கொரோனா வைரஸ் ஊடுருவியதன் பின்னணி தகவல்: கடும் பீதியில் அதிகாரிகள், கைதிகள்

சேலம்: தமிழகத்தில் தற்போது தினமும் 1,000 பேருக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் கடும் சோதனையையும் தாண்டி, சிறைக்குள் கொரோனா புகுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து சிறை நிர்வாகம் புதிய முடிவை எடுத்தது. அதாவது, புதிதாக கைது செய்யப்பட்டு வருவோரை வைப்பதற்காக கோரன்டைன் சிறைகளை அமைத்தது. தமிழகம் முழுவதும் ஒவ்ெவாரு மாவட்டத்திலும் 2 முதல் 5 சிறைகள் கோரன்டைன் சிறையாக மாற்றப்பட்டது. இச்சிறைகளில் மட்டுமே புதிய கைதிகள் அடைக்கப்படுவார்கள்.  முக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு வருவோரை மருத்துவமனைக்கு அழைத்து சென்று சான்றிதழ் பெற்று வரவேண்டும் எனவும், சான்றிதழ் இல்லாத கைதிகளை அடைப்பது இல்லை என்றும் தெரிவித்தனர். இவ்வளவு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், அதையும் தாண்டி கொரோனா வைரஸ், மத்திய சிறைக்குள் புகுந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகம் முழுவதுமுள்ள தண்டனை கைதிகள் பிளஸ்2 தேர்வு எழுத சென்னை புழல் சிறைக்கு சென்றிருந்தனர். அதே நேரத்தில் கைதிகளுக்கான சட்ட விழிப்புணர்வு பயிற்சிக்காகவும் சென்றனர். அந்த கைதிகளில் மதுரை, பாளையங்கோட்டை, திருச்சியை சேர்ந்த கைதிகள் தனி வேன் மூலம் அந்தந்த சிறைகளுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இவர்களுக்கான பரிசோதனையில், மதுரை, பாளையங்கோட்டை கைதிகள் தலா 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. திருச்சி, கடலூர் சிறைகளில் தலா 1 கைதிக்கும் பரவியது. சென்னை புழல் சிறையில் தண்டனை கைதிகளுக்கு நடத்திய சோதனையில் 30 கைதிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. சிறைக்குள்ளேயே இருக்கும் இவர்களுக்கு கொரோனா எவ்வாறு பரவியது என்பதை கண்டுபிடிக்க முடியாமல் சிறை அதிகாரிகளும், சுகாதாரத்துறை அதிகாரிகளும் திணறி வருகின்றனர். சென்னை புழல் சிறையில் கைதிகள் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார்கள். இதில் 20க்கும் மேற்பட்ட கைதிகள் பணியாற்றி வருகிறார்கள். இவர்கள் மூலமாக மற்ற கைதிகளுக்கு பரவியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து பெட்ரோல் பங்க்கை மூடவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சிறையில் இருந்து தான் திருச்சி, மதுரை, பாளையங்கோட்டை ஆகிய சிறைகளுக்கும் கொரோனா பரவியது தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில் சேலம் கைதிகள் 5 பேர் புழல் சிறையில் உள்ளனர். அவர்கள் இன்னும் சேலம் கொண்டு வரப்படவில்லை. இதனால் சிறைத்துறை அதிகாரிகளும், சிறைக்கைதிகளும் கடும் பீதியில் உள்ளனர்.

Tags : Prison , 37 Coroner Virus,Infiltrates, Prison
× RELATED இடைக்கால ஜாமின் பெற்ற கெஜ்ரிவால்...