×

செங்கல் சூளையில் சிறைவைக்கப்பட்டுள்ள 300 கொத்தடிமைகளை மீட்கக்கோரி வழக்கு: அரசு பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள 300 தொழிலாளர்களை மீட்கக் கோரிய மனுவுக்கு தமிழக அரசும், மாவட்ட நிர்வாகமும் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  திருவள்ளூர் மாவட்டம், புதுப்பாக்கத்தில் முனுசாமி என்பவரின் செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள துமா பார்த்தியா, சாட்டி பாரியா, கோபால் சாஹுலியா பானு சாஹு, ஒஷா பந்து சாஹு ஆகியோரை மீட்க உத்தரவிடக் கோரி வக்கீல் ஏ.பி.சூரிய பிரகாசம்  சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்துள்ளார்.  அதில், செங்கல் சூளையில் கொத்தடிமைகளாக வைக்கப்பட்டுள்ள இவர்கள் கொரோனா ஊரடங்கால் சொந்த ஊருக்கு செல்ல முற்பட்டபோது, அவர்கள் தப்பியோட முயற்சித்ததாக கூறி அடியாட்களை ஏவி அவர்களை கடுமையாக தாக்கியுள்ளனர்.

இதில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக சிகிச்சை வழங்கவில்லை. இத்தாக்குதல் சம்பவம் குறித்த வீடியோ காட்சிகளை சமூக வலைதளங்கள் மூலம் தெரிந்து கொண்ட சமூக ஆர்வலர்கள் காயமடைந்தவர்களை மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். இவர்களை மீட்க நடவடிக்கைகள் எடுக்காமல், அரசு அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகிறார்கள். எனவே, கொத்தடிமைகளாக உள்ள இவர்களை மீட்குமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் கிருபாகரன், ஹேமலதா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, சூரியபிரகாசம் ஆஜராகி, இந்த சூளையில் சுமார் 300 பேர் கொத்தடிமைகளாக உள்ளனர். அவர்களுடன் சுமார் 50 குழந்தைகளும் உள்ளனர் என்றார். இதைக்கேட்ட நீதிபதிகள் இந்த மனுவுக்கு, 2 நாட்களில் பதிலளிக்குமாறு தமிழக உள்துறை செயலாளர், திருவள்ளூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட எஸ்பி ஆகியோருக்கு உத்தரவிட்டனர்.

Tags : captives ,Govt , Case, 300 bricks imprisoned , brick kiln: Govt.
× RELATED சென்னை ராஜிவ் காந்தி அரசு...