×

ஆவடி மாநகராட்சியில் கொரோனா தொற்றுக்கு ரயில்வே ஊழியர் பலி: 220 பேர் பாதிப்பு

ஆவடி: ஆவடி மாநகராட்சியில் கொரோனா தொற்றுக்கு ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் ஒருவர் பலியாகி உள்ளார். இதனை அடுத்து, பலி எண்ணிக்கை 6ஆக உயர்ந்து உள்ளது. மேலும், இந்த தொற்றால் இதுவரை 220க்கு மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு வருகின்ற 31ம்தேதி வரை அமலில் உள்ளது. தமிழகத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு பல தளர்வுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கிடையில், திருவள்ளூர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஆவடி மாநகராட்சி பகுதியில் நேற்று வரை 220க்கு மேற்பட்டோர்  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக சென்னை, திருவள்ளூரில் உள்ள அரசு மருத்துவமனைகளில் உள்ள கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் ஆவடி அடுத்த திருமுல்லைவாயல், சக்தி நகர் பகுதியைச் சேர்ந்த 82வயது ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் உடல்நலக்குறைவு காரணமாக நேற்று முன்தினம் பெரம்பூர் ரயில்வே அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதன் பிறகு, அவருக்கு கொரோனா பரிசோதனை நடைபெற்றது. அந்த முடிவில் அவருக்கு தொற்று பாதிப்பு இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆவடி மாநகராட்சி பகுதியில் தொற்று பாதிப்பால் ஒரு பெண் உள்பட 6பேர் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனால், இப்பகுதி மக்கள் பீதியுடன் உள்ளனர்.



Tags : Railway employee ,Awadhi Corporation Railway ,Awadhi Corporation , Railway employee ,killed, 220 injured ,Awadhi Corporation
× RELATED ரயில்வே ஊழியர், டிரைவர் இளம்பெண்...