×

மாடியில் சைக்கிள் ஓட்டியபோது மாஞ்சாநூல் முகத்தை அறுத்து 3 வயது சிறுவன் படுகாயம்: பட்டம் விட்ட 3 பேர் கைது

சென்னை: மொட்டை மாடியில் சைக்கிள் ஓட்டியபோது மாஞ்சா நூல் முகத்தில் சிக்கி அறுத்ததில் 3 வயது சிறுவன் படுகாயமடைந்தான். இதுதொடர்பாக 3 பேரை போலீசார் கைது செய்தனர். சூளைமேடு 2வது லேன் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன். தனியார் நிறுவன ஊழியர். இவர், அடுக்குமாடி குடியிருப்பின் மொட்டை மாடியில் நேற்று முன்தினம் மாலை தனது 3 வயது மகன் மோனித்துக்கு சைக்கிள் ஓட்ட கத்துக்கொடுத்து கொண்டிருந்தார். அப்போது திடீரென மாஞ்சா நூல் பட்டம் சிறுவனின் இடது பக்க முகத்தின் கண் புருவத்திலும், வலது பக்க மூக்கின் மீதும் விழுந்து அறுத்ததால், சிறுவன் முகத்தில் ரத்தம் வழிந்தோடியது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த மணிகண்டன், சாதுர்யமாக செயல்பட்டு மகன் முகத்தில் விழுந்த மாஞ்சா நூலை அகற்றினார். பிறகு மகனை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து ெசன்று சிகிச்சை அளித்தார்.

பின்னர் மணிகண்டன் மனைவி பிரியங்கா சூளைமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்படி  போலீசார் மாஞ்சா நூல் தயாரித்து பட்டம் விட்ட கோடம்பாக்கம் வரதராஜ பேட்டையை  சேர்ந்த பிரபாகரன் (29), அயனாவரம் 8வது தெருவை சேர்ந்த சீனிவாசன் (45), சூளைமேடு சுபேதர் கார்டன் பகுதியை சேர்ந்த விக்னேஷ் (24) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 240 பட்டம், 8 மாஞ்சா நூல் உருண்டை பறிமுதல் செய்யப்பட்டது. ேமலும், தலைமறைவாக உள்ள மாஞ்சா நூல் மற்றும் பட்டம் தயாரித்து விற்பனை செய்த ஜாகிர் உசேன் மற்றும்  சேகர்  ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.

Tags : boy chops , 3-year-old boy, face,cycling upstairs, 3 arrested
× RELATED சென்னை புளியந்தோப்பு அருகே...