×

பட்டாபிராமில் ரூ.235 கோடி செலவில் புதிய டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா: முதல்வர் எடப்பாடி அடிக்கல்

சென்னை: திருவள்ளூர் மாவட்டம், பட்டாபிராமில் தொழில் துறை சார்பில் ₹235 கோடி செலவில் புதிதாக கட்டப்படவுள்ள டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்காவிற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று அடிக்கல் நாட்டினார். இந்த புதிய டைடல் தகவல் தொழில்நுட்ப பூங்கா 10 ஏக்கர் பரப்பில், 5.57 லட்சம் சதுரஅடி கட்டிட பரப்பளவில், 21 அடுக்குமாடி கட்டிடமாக அமைய உள்ளது. நவீன வசதிகளுடன் கூடிய அலுவலகங்கள், தொழில் மையங்கள், பொது கட்டமைப்புகள், ஆகாய பூங்கா என பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்பட உள்ளது.  சென்னையின் வடக்கு பகுதியில் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு அடித்தளமாக இது அமையும். இதனைச்சுற்றி பல தொழில் நிறுவனங்கள் உருவாவதை ஊக்குவித்து, சுமார் 25,000 பேருக்கு  நேரடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இத்திட்டம் 24 மாதங்களில் முடிக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வர உள்ளது.

கொரோனா தொற்றால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பில் இருந்து குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக, தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் மூலம் “கோவிட் நிவாரணம் மற்றும் மேம்பாட்டு திட்டம்” என்ற திட்டத்தை முதல்வர் எடப்பாடி கடந்த 31ம் தேதி அறிவித்தார். இதன் கீழ், தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகத்தின் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு இணையதளம் மூலம் ₹25 லட்சம் வரை தமிழ்நாடு அரசின் 6 சதவீத வட்டி மானியத்துடன் பிணை சொத்தின்றி கடன் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. இன்று வரை 855 பேருக்கு ₹112 கோடி கடன் அனுமதி அளித்துள்ளது. மேலும், 5 குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன வாடிக்கையாளர்களுக்கு தலா ₹25 லட்சம் கடன் தொகைக்கான காசோலைகளை முதல்வர் நேற்று வழங்கினார். நிகழ்ச்சியில், அமைச்சர்கள் எம்.சி.சம்பத், பாண்டியராஜன், தலைமை செயலாளர்  சண்முகம், தொழில்துறை செயலாளர் முருகானந்தம், தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவன தலைவர் காகர்லா உஷா ஆகியோர் பங்கேற்றனர்.


Tags : Tidal Information Technology Park ,Pattabram ,New Tidal Information Technology Park , New Tidal Information Technology Park ,Pattabram at a cost of Rs
× RELATED பட்டாபிராம் ரயில் நிலையம் அருகே 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்: வாலிபர் கைது