×

மத்திய அமைச்சரவை அறிவிப்பு சாலையோர வியாபாரிகளுக்கு ரூ.10,000 வழங்கும் சிறப்பு கடனுதவி: விவசாயிகள், சிறு, குறு நிறுவனங்களுக்கு சலுகை

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் டெல்லியில் நேற்று நடந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், சிறு, குறு நிறுவனங்கள் மற்றும் ஏழை வியாபாரிகள் நலனுக்கான சலுகைகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சாலையோர வியாபாரிகளுக்கான சிறப்பு குறு கடன் வசதியை மத்திய அரசு அறிமுகம் செய்தது. பிஎம் ஸ்வநிதி எனப்படும் இக்கடன் திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகளுக்கு ₹10,000 வங்கிக் கடன் தரப்படும். இதற்காக ₹5,000 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்யும். இக்கடனை வியாபாரிகள் மாதத் தவணயாக ஒரு ஆண்டிற்குள் செலுத்தி விட வேண்டும். இத்திட்டத்தின் மூலம் சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் மீட்கப்படும் என்றும், 50 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முறையாக தவணை செலுத்துவோருக்கு 7% வட்டி மானியம் கிடைக்கும். மேலும், ₹20 லட்சம் கோடிக்கான கொரோனா சிறப்பு நிவாரண நிதி தொகுப்பில் அறிவிக்கப்பட்டபடி, நலிவடைந்த மற்றும் வராக்கடன் பட்டியலில் இருக்கும் சிறு, குறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்களுக்கு ₹20 ஆயிரம் கோடி கடன் வழங்க மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் தரப்பட்டது.

மேலும் சிறு, குறு மற்றும் நடுத்தர  நிறுவனங்களுக்கு ₹50 ஆயிரம் கோடி நிதி முதலீட்டுக்கு வழி வகை செய்யவும், சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு மத்திய  அரசு வகுத்திருந்த வரையறை மாற்றி அமைக்கவும் ஒப்புதல் தரப்பட்டது. சிறு, குறு நிறுவனங்கள் பங்கு சந்தையில் பட்டியலிடவும் ஊக்கப்படுத்தப்படும் என்றும் அமைச்சரவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காரீப் பருவ பயிர்களான மக்காச்சோளம், துவரம் பருப்பு, பாசிப் பயிறு உள்ளிட்ட 14 விளைப் பொருட்களுக்கான கொள்முதல் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், விவசாயிகளுக்கு 50 முதல் 83 சதவீதம் வரை குவிண்டாலுக்கு கூடுதலாக விலை கிடைக்கும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ₹53 அதிகரித்து குவிண்டால் ₹1868 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பருத்தியின் குறைந்தபட்ச ஆதரவு விலை ₹260 அதிகரித்து குவிண்டால் ₹5,515 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ₹3 லட்சம் வரையிலான விவசாய கடனுக்கு 4 சதவீத வட்டி அடிப்படையில் கடன் வழங்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

மோடி நம்பிக்கை

மத்திய அமைச்சரவை முடிவு குறித்து பிரதமர் மோடி கூறுகையில், ‘‘மத்திய அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முடிவுகளின் மூலம் விவசாயிகள், தொழிலாளர்கள், பணியாளர்கள் வாழ்வில் நேர்மறையான மாற்றம் பிறக்கும்’’ என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags : Union Cabinet Announces Special Loan for Roadside Dealers ,enterprises ,Union Cabinet ,roadside dealers , Union Cabinet, Rs 10,000 grant,roadside dealers, concession, small enterprises
× RELATED 127 ஆண்டுகளுக்குப் பிறகு கோத்ரேஜ் குழுமம் இரண்டாகப் பிரிந்தது