×

வர்த்தக காஸ் சிலிண்டர் ரூ.110 உயர்வு மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.37 உயர்ந்தது

சேலம்: நாடு முழுவதும் நடப்பு மாதத்திற்கு மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹37 உயர்ந்தது. சென்னையில் ₹606.50க்கும், சேலத்தில் ₹625.50க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 19 கிலோ வர்த்தக காஸ் சிலிண்டர் விலை ₹110 உயர்ந்து, ₹1254 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் மாற்றம் மற்றும் அந்நிய செலாவணிக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு அடிப்படையில் எண்ணெய் நிறுவனங்களின் கூட்டமைப்பு, சமையல் காஸ் சிலிண்டர் விலையை அவ்வப்போது மாற்றி அமைத்து வருகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்ததால், கடந்த மாதம் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டது. கடந்த மாதம் மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹192 வரையும், 19 கிலோ வர்த்தக சிலிண்டர் விலை ₹258 வரையும் குறைக்கப்பட்டது.  

இந்நிலையில், நடப்பு மாதத்தில் மானியமில்லா வீட்டு உபயோக சிலிண்டர் விலை ₹37வரையும், 19கிலோ எடை கொண்ட வர்த்தக சிலிண்டர் விலை ₹110வரையும் எண்ணெய் நிறுவனங்கள் திடீரென உயர்த்தியுள்ளன. தற்போது மானியமில்லா சிலிண்டர் டெல்லியில் ₹593, கொல்கத்தா ₹616, மும்பை ₹590.50, சென்னை ₹606.50, சேலம் ₹573.50 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் சென்னையில் கடந்த மாதம் ₹569.50க்கு விற்கப்பட்ட காஸ் சிலிண்டர் ₹37 உயர்த்தப்பட்டு ₹606.50க்கும், சேலத்தில் ₹573.50க்கு விற்கப்பட்ட சிலிண்டர் ₹52 உயர்த்தப்பட்டு ₹625.50க்கும் விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

 இதேபோல் சென்னையில் ₹1,144.50க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர் விலை ₹110 உயர்த்தப்பட்டு ₹1,254 ஆகவும், சேலத்தில் ₹1,105.50க்கு விற்கப்பட்ட வர்த்தக சிலிண்டர் விலை ₹110 உயர்த்தப்பட்டு ₹1,215.50 ஆகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ள நிலையில் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க வேண்டும் என்று பல்வேறு அமைப்புகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த மாதம் குறைக்கப்பட்ட சிலிண்டர் விலை, நடப்பு மாதத்தில் உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags : Rs , Commercial Gas, cylinder, rose, Rs
× RELATED இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் செப்டம்பர் மாதம் வரை நீட்டிப்பு