×

மதுரை கோட்டத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு ஆயிரத்து 83 பஸ்கள் இன்று முதல் இயக்கம்: இரவு 9 மணி வரை மட்டுமே சர்வீஸ்

மதுரை: மதுரை கோட்டத்தில் 2 மாதங்களுக்கு பிறகு ஆயிரத்து 83 பஸ்கள் இன்று காலை முதல் இயக்கப்படுகின்றன. கொரோனா வைரஸ் பாதிப்பால் கடந்த மார்ச் 24ம் தேதி முதல் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனையடுத்து, அரசு பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சுமார் 2 மாத இடைவெளிக்குப்பிறகு ஊரடங்கில் சில தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது. இதில், பொது போக்குவரத்து இயக்கத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இன்றுமுதல் (ஜூன் 1) காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டும் அரசு பஸ் போக்குவரத்து கழக பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மதுரை, தேனி, திண்டுக்கல் மற்றும் விருதுநகர் மாவட்டங்களை உள்ளடக்கிய அரசு போக்குவரத்து கழகத்தின் மதுரை கோட்டத்தில் 39 டெப்போக்கள் உள்ளன. இவற்றின் மூலம் ஆயிரத்து 285 உள்ளூர் பேருந்துகள், 881 வெளியூர் பேருந்துகள் என 2 ஆயிரத்து 166 பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளதால், ஆயிரத்து 83 பஸ்கள் 2 மாத இடைவெளிக்கு பின் இன்று காலை முதல் இயக்கப்படுகின்றன.

பஸ்களில் பயணிகளை சமூக இடைவெளியுடன் அனுமதிக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இதன்படி, 52 முதல் 55 சீட்களை கொண்ட வெளியூர் பஸ்களில் அதிகபட்சம் 34 பயணிகளும், 40 சீட்டுகளை கொண்ட உள்ளூர் பஸ்களில் 24 பயணிகளும் அனுமதிக்கப்பட உள்ளனர். மதுரை கோட்டத்திற்குட்பட்ட பஸ்கள் மதுரை மண்டலத்திலுள்ள திண்டுக்கல், மதுரை, தேனி, விருதுநகர், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களுக்குட்பட்ட பகுதிகளுக்கு மட்டுமே இயக்கப்படுகிறது. இந்த 6 மாவட்டங்களை தாண்டி மாநிலத்தின் பிற பகுதிகளுக்கு மதுரை கோட்ட பஸ்கள் இயக்கப்படாது. அதேசமயம், மதுரை மண்டலத்திற்குட்பட்ட சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து கும்பகோணம் கோட்டத்தின் மூலம் இயக்கப்பட்ட பஸ்கள் மதுரை மண்டலத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு வழக்கம் போல இயக்கப்படும்.அந்தந்த பேருந்து நிலையங்களில் இருந்து காலை 5 மணி முதல் இரவு 9 மணிக்குள்ளாக மட்டுமே பஸ் போக்குவரத்து இயங்கும். இதன்பிறகு, இரவு 9 மணி முதல் காலை 5 மணி வரை முழு ஊரடங்கு முழுமையாக பின்பற்றப்படும். இதற்காக பஸ்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன. டிரைவர், கண்டக்டர் மற்றும் பயணிகள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். தெர்மல் மீட்டர் மூலம் காய்ச்சலின் அளவு பரிசோதிக்கப்பட்டே பயணிகள் அனுக்கமதிப்பட உள்ளனர்.

‘டிரைவர், கண்டக்டர்களுக்கு சோதனை செய்ய வேண்டும்’
தொமுச பொதுச்செயலாளர் மேலூர் அல்போன்ஸ் கூறுகையில், ‘‘கொரோனா தொற்று முடிவில்லாத நிலையில், பஸ்கள் இயக்கப்படவுள்ளன. பணிக்குச்செல்லும் டிரைவர், கண்டக்டர்களுக்கு தேவையான அனைத்துவிதமான பாதுகாப்பு உபகரணங்களும் நிர்வாகத்தால் வழங்கப்பட வேண்டும். பஸ்கள் முறையாகவும், முழுமையாகவும் கிருமிநாசினியால் சுத்தம் செய்யப்பட வேண்டும். டிரைவர், கண்டக்டர்களுக்கு அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்’’ என்றார்.

மாஸ்க் கட்டாயம்
இன்று முதல் அரசுப் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனையடுத்து, பஸ்களின் இருக்கைகளுக்கு ஸ்டிக்கர்கள் ஒட்டும் பணி மதுரையில் நேற்று நடந்தது. முகக்கவசம் அணிந்தால் மட்டுமே பஸ்சில் பயணம் செய்ய அனுமதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முதல் மதுரையில் 400 பஸ்களை இயக்க உள்ள நிலையில், டிரைவர், கண்டக்டர்களுக்கு சானிடைசர் வழங்கவும் நிர்வாகம் ஏற்பாடுகளை செய்துள்ளது.

Tags : Madurai Fort Thousand ,Madurai Fort , Thousand 83 buses ,after 2 months, Madurai Fort
× RELATED தெற்கு ரயில்வே மதுரை கோட்டத்தில்...