×

சேலத்தின் பிரதானம் களை இழக்கும் அவலம் சீனாவிலிருந்து இறக்குமதி இல்லாததால் இறங்கு முகத்தில் சேலம் வெள்ளித்தொழில்

* விதிகள் தளர்ந்த பிறகும் உற்பத்தி மந்தம்
* தேக்கம், வருவாய் இழப்பால் வேதனை

சேலம்:  சேலத்தின் பிரதானமாக திகழும் வெள்ளித் தொழில், ஊரடங்கு விதிகள் தளர்ந்த பிறகும், மந்தமாக நடப்பது தொழிலாளர்கள் மத்தியில் வேதனையை ஏற்படுத்தி உள்ளது. சேலத்தில் குகை, செவ்வாய்ப்பேட்டை, ஆண்டிப்பட்டி, பனங்காடு, தாதாகாப்பட்டி என்று பல்வேறு இடங்களிலும், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெள்ளிப்பட்டறைகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தொழிலில் ஒரு கொலுசு உருவாக வேண்டும் என்றால் 20க்கும் மேற்பட்ட நிலைகளில் உள்ள தொழிலாளர்களை கடந்தே வரவேண்டும். நேரடியாகவும், மறைமுகமாகவும்  2லட்சம் தொழிலாளர்களுக்கு வாழ்வளித்த இந்த தொழில் முடங்கியதால் ₹500 கோடிக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளது. வெள்ளி உற்பத்தி செய்யும் நாடுகளின் பட்டியலில் இந்தியா 20வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான், குஜராத், ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களில் வெள்ளி உற்பத்தி செய்யப்படுகிறது. இந்தியாவிற்கு சீனா, லண்டன், ஆஸ்திரேலியா, துபாய் போன்ற நாடுகளில் இருந்து வெள்ளி இறக்குமதி செய்யப்படுகிறது. இதில் தமிழகத்தை பொறுத்தவரை  வெள்ளி கொலுசு, மெட்டி, அரைஞாண்கொடி சேலம் மாவட்டத்தில் பிரத்யோகமான முறையிலும், கலைநயத்துடன் வடிவமைத்து கொடுக்கின்றனர். சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளி கால்கொலுசு, மெட்டி, அரைஞாண்கொடி  70 சதவீதம் டெல்லி, குஜராத், மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா,  கல்கத்தா உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்கின்றன. மீதமுள்ள 30 சதவீதம் தான்  தமிழகத்தில் பல பகுதிகளுக்கு செல்கிறது.

 இந்தியாவிலேயே சேலத்தில் உற்பத்தி  செய்யப்படும் வெள்ளிக் கொலுசுகள் எளிதில்  கருக்காது என்பது தனிச்சிறப்பு. அதனால் வட  மாநிலங்களில் சேலம் வெள்ளிக்கு எப்போதும் தனிமவுசு உண்டு. சேலத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் 50 டன் அளவுக்கு வெள்ளி கொலுசு மற்றும் வெள்ளியிலான ஆபரண பொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. வெளி மாவட்டம், மாநிலங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. வெள்ளி கொலுசு உற்பத்தி செய்ய 22 நிலைகளையும் கடக்க 14 பட்டறைகள் உள்ளன. இந்த பட்டறைகளில் உள்ளூர் தொழிலாளிகள், வெளிமாநில தொழிலாளர்கள் என 5 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த பட்டறைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு ₹ 300 முதல் ₹ 350 வரை கூலி வழகப்படுகிறது. இவர்களை தவிர வெள்ளி வியாபாரிகள் ஆயிரக்கணக்கில் உள்ளனர்.சேலத்தில் உற்பத்தி செய்யப்படும் வெள்ளிப்பொருட்கள் பெரும்பாலும் வியாபாரிகள் வட மாநிலங்களுக்கு ரயில், பஸ்களில் கொண்டு செல்கின்றனர். இவ்வாறு கொண்டு செல்லும் பொருட்களுக்கு இரண்டு அல்லது மூன்று மாதம் கழித்து தான் அந்த பொருட்களுக்குரிய தொகை கிடைக்கும். பல ஆண்டு காலமாக வெள்ளி தொழில் எவ்வித பிரச்னையும் இல்லாமல் நல்லமுறையில் இயங்கி வந்தது. அவ்வப்போது வெள்ளி விலையில் ஏற்றம், இறக்கம் வரும்போது தொழிலில் சற்று மந்த நிலை ஏற்படும்.

இந்த நிலையில், கொரோனா வைரஸ் பரவல் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக கடந்த 2 மாதத்தில் பல்லாயிரம் டன் வெள்ளி உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளி வியாபாரிகளுக்கு ₹1000 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது 4ம் கட்ட ஊரடங்கில் தான் சில தளர்வுகள் செயல்பட்டுள்ளது. ஆனால் விமான போக்குவரத்து இல்லாததால் வெளிநாடுகளில் இருந்து வெள்ளிக்கட்டிகள் வரவில்லை. இதன் காரணமாக சேலம் சுற்று வட்டார பகுதிகளில் வெள்ளி பட்டறைகளில் பெயரளவுக்கு மட்டுமே உற்பத்தி நடந்து வருகிறது. இதனால் சேலத்தின் பிரதானமாக திகழும் வெள்ளிப்பொருட்கள் உற்பத்தி, மெல்ல மெல்ல களை இழந்து வருகிறது. இது குறித்து வெள்ளி வியாபாரிகள் சங்க நிர்வாகி அய்யாக்கண்ணு கூறியதாவது: ஊரடங்கு காரணமாக ஏற்கனவே கடைகளில் இருப்பில் உள்ள வெள்ளிப்பொருட்கள் விற்பனையாக இன்னும் மூன்று மாதமாகும். அதுவரை வியாபாரிகள் புது வெள்ளிப்பொருட்கள் கேட்டு ஆர்டர் தரமாட்டார்கள். தற்போது 10 முதல் 20 சதவீதம் மட்டுமே ஆர்டர் தருகின்றனர். ஊரடங்குக்கு  முன்பு சேலம் வெள்ளி வியாபாரிகள் வட மாநிலங்களுக்கு பல கோடி மதிப்பில் வெள்ளிப்பொருட்களை விற்பனைக்கு அனுப்பியுள்ளனர். ஊரடங்கால் கடந்த இரண்டு மாதமாக வியாபாரம் இல்லாததால், வியாபாரிகள் பலருக்கு கோடிக்கணக்கில் பணம் வராமல் உள்ளது.

அந்த தொகை வருவதற்கு குறைந்தபட்சம் 6 மாத காலமாகும். ஏற்கனவே யுகாதி, ராம்ஜான் பண்டிகை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. அதனால் அடுத்து தீபாவளி பண்டிகைக்கு தான் வெள்ளிப்பொருட்கள் விற்பனை இருக்கும். தமிழகத்தில் விரைவில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்படவுள்ளது. முதலில் மக்கள் பள்ளிகட்டணம், அத்தியாவசிய பொருட்கள் வாங்க மட்டுமே ஆர்வம் காட்டுவார்கள். அவர்களுக்கு வெள்ளி பொருட்கள் மீது ஆர்வம் ஏற்படாது. அதனால் இன்னும் சில மாதத்திற்கு வெள்ளி வியாபாரம் மந்தமாக தான் இருக்கும்.  பட்டறைகளில் வேலை இல்லாமல் பலர் மாற்று தொழிலுக்கு செல்லும் அவலம் ஏற்படும். வெள்ளி தொழில் பழைய நிலைக்கு வர ஓராண்டு காலமாகும். இந்த ஒரு ஆண்டு காலத்தில் வெள்ளி தொழிலில் பெரிய அளவில் லாபத்தை எதிர்பார்க்க முடியாது. சேலத்தில் பீகார், ஒரிசா, உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் தொழிலாளியாகவும், பட்டறைகளையும்  வைத்துள்ளனர். இவர்களில் பெரும்பாலனோர் அவர்கள் சொந்த மாநிலங்களுக்கு சென்றுவிட்டனர்.

இதன் காரணமாக வெள்ளிப்பட்டறை உரிமையாளர்கள், வியாபாரிகள் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். கடைகள் வைக்க உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் வங்கிகளில் கடன் வாங்கியுள்ளனர். வெள்ளி வியாபாரம் இல்லாததால், அவர்கள் வங்கி கடனை அடைக்க முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளி தொழில்களை காக்க வங்கிகளில் வாங்கிய கடன்களை அரசு தள்ளுபடி செய்ய முன்வரவேண்டும்.மேலும் இந்தியா முழுவதும் தொழில் நிறுவனங்களை மேம்படுத்த பிரதமர் மோடி ₹20 லட்சம் கோடி ஒதுக்கியுள்ளார். அந்த தொகையில் வெள்ளித்ெதாழிலை மேம்படுத்த அதிக தொகை ஒதுக்க வேண்டும். வெள்ளிபட்டறை உரிமையாளர்கள், வியாபாரிகளுக்கு வங்கிகளில் அதிகளவில் கடனுதவி வழங்கவேண்டும். இவ்வாறு அய்யாக்கண்ணு கூறினார்.


Tags : Salem ,China , loss, Salem staples, lack , imports, China
× RELATED சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே...