×

10 ஆண்டுகளாக அவதி சாலை பணி துவங்கா விட்டால் யூனியன் அலுவலகம் முற்றுகை: கிராமமக்கள் அறிவிப்பு

சாயல்குடி: கடலாடி அருகே 10 ஆண்டுகளாக சேதமடைந்து கிடக்கும் நரசிங்கக்கூட்டம் சாலையில், புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டும் 6 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் முற்றுகையிடும் போராட்டம் செய்ய போவதாக கிராமமக்கள் அறிவித்துள்ளனர். கடலாடி அருகே நரசிங்கக் கூட்டம் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன. விவசாயம், கூலி வேலை செய்து வருகின்றனர். இங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மருத்துவமனை, உயர்நிலை, மேல்நிலை கல்வி படிக்க, அரசு அலுவலகங்கள், பஸ் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் 3 கிலோ மீட்டர் தூரம் உள்ள கடலாடிக்கு வந்து செல்கின்றனர். இக்கிராமத்திற்கு பஸ் போக்குவரத்து இல்லாததால் ஆட்டோ மற்றும் இருசக்கர வாகனங்களில் மட்டுமே சென்று வருகின்றனர்.கடலாடியிலிருந்து மீனங்குடி வழியாக செல்லும் சாலையிலுள்ள 5 மடை சந்திப்பிலிருந்து நரசிங்கக்கூட்டம் செல்ல சாலை உள்ளது. இச்சாலை கடந்த 10 ஆண்டுகளாக சேதமடைந்து குண்டும், குழியுமாக கிடக்கிறது. சாலையின் இருபுறமும் விவசாய நிலங்கள் இருப்பதால் மடைகளுடன் சிறிய பாலங்கள் இருந்தது. அதுவும் சேதமடைந்து இடிந்து போனது. இதனால் சாலையில் ஆட்டோக்கள் கூட செல்ல முடியவில்லை.

இந்த வழித்தடத்தை பயன்படுத்த முடியாமல் கடையாக்குளம்-கடலாடி செல்லும் சாலை சந்திப்பு சாலை வழியாக கடலாடி செல்ல மீனங்குடி-நரசிங்கக்கூட்டம் கண்மாய் கரையை சாலையாக பயன்படுத்தி வருகின்றனர். கரை உயரமாக இருப்பதால் விபத்து அபாயம் இருப்பதாக கூறுகின்றனர். மழை பெய்தால் நடந்து கூட செல்ல முடியாத நிலை ஏற்படும். அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாத அவலநிலை இருக்கிறது.இந்த நிலையில் கடந்தாண்டு நரசிங்கக்கூட்டம் முதல் மீனங்குடி சாலை சந்திப்பு வரை புதிய தார்ச்சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டுள்ளது. இதனால் சாலையில் தேவையான இடங்களில் பாலங்கள் கட்டப்பட்டு, புதிய சாலை அமைக்க பழைய சாலையை சீரமைக்கும் பொருட்டு மண் வேலை நடந்துள்ளது. ஆனால் வேலை முழுமையாக, தொடர்ச்சியாக நடக்காமல் கடந்த ஆறு மாதமாக கிடப்பில் போடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அவதிப்பட்டு வருவதால், புதிய தார்ச்சாலை அமைக்க கோரி கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த போவதாக கிராமமக்கள் கூறுகின்றனர்.

இது குறித்து கோபாலகிருஷ்ணன் கூறும்போது, ‘‘கடந்த 10 ஆண்டுகளாக சாலை முற்றிலும் சேதமடைந்து கிடக்கிறது. இச்சாலையில் இருசக்கர வாகனத்தில் கூட செல்ல முடியவில்லை. இச்சாலையோரம் உள்ள மயானத்திற்கு இறந்தவர் உடலை சுமந்து நடந்து செல்ல முடியவில்லை. அத்தியாவசிய பொருட்கள் வாங்க, மருத்துவமனை, அரசு அலுவலகங்கள், மேல்நிலை கல்வி பயில கடலாடிக்கு சென்று வர கண்மாய் கரைமீது செல்லும் மாற்று பாதையை பயன்படுத்தி வருகிறோம். கரை உயரமாக இருப்பதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மழை பெய்தால் நடந்து கூட செல்ல முடியாமல் வீட்டிற்கு முடங்கி கிடக்கும் அவலம் உள்ளது. அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் கூட வரமுடியாது. இந்த நிலையில் புதிய சாலை அமைக்க டெண்டர் விடப்பட்டு, பாலம் கட்டும் பணி மட்டுமே நடந்துள்ளது. சாலையின் இருபுறம் சீரமைக்கும் பணியோடு, கிடப்பில் போட்டு விட்டனர்.

புதிய சாலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளதால், போக்குவரத்திற்கு உரிய சாலையின்றி கடும் அவதிக்குள்ளாகி வருகிறோம். சாலை பணியை உடன் துவங்கி, தரமானதாக முழுமையாக முடிக்க கோரி பல முறை கடலாடி யூனியன் அலுவலகத்தில் புகார் தெரிவித்து விட்டோம். ஆனால் நடவடிக்கை இல்லை. இதனால் வட்டார வளர்ச்சி அலுவலர், தாசில்தார் மற்றும் காவல்துறையிடம் முறையாக புகார் மனு அளித்து, நடவடிக்கை எடுக்கவில்லை எனில் கடலாடி யூனியன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.



Tags : Union ,union office blockade , Union office blockade,10 years , avadi road work, villagers notice
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு...