×

சீசனுக்கு ஏற்றமாதிரி புதுசு புதுசா யோசிக்கிறாங்க... கொரோனா கணக்கெடுப்புன்னு வீடுபுகுந்து நகை பறித்தவர் கைது: மேலும் மூவருக்கு வலை

பெரம்பூர்: கொரோனா கணக்கெடுப்பதாக கூறி வீடு புகுந்து நகை பறித்தவர் கைது செய்யப்பட்டார். சென்னை எம்கேபி நகர், 17வது மேற்கு குறுக்கு தெருவை சேர்ந்தவர் லெனின். இவரது மனைவி செல்வி (48). இவர், கடந்த 20ம் வீட்டில் இருந்தபோது, அங்கு வந்த 2 பேர், ‘‘நாங்கள் மாநகராட்சி சுகாதாரத்துறை ஊழியர்கள். கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்பு நடத்த வந்துள்ளோம். உங்கள் வீட்டில் யாருக்காவது காய்ச்சல் உள்ளதா,’’ என கேட்டுள்ளனர்.அதற்கு செல்வி, ‘‘எங்கள் வீட்டில் யாருக்கும் காய்ச்சல் இல்லை,’’ என்றார். அப்போது, அந்த 2 பேர், செல்வியிடம் பேச்சு கொடுத்தபடி வீட்டிற்குள் சென்று, திடீரென கதவை உள்பக்கமாக தாழிட்டு, கத்தி முனையில் மிரட்டி, செல்வி அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றனர். சுதாரித்துக்கொண்ட செல்வி, அவர்களை கீழே தள்ளிவிட்டு, அலறி கூச்சலிட்டபடி வெளியே ஓடி வந்துள்ளார். அப்போது, வெளியே நின்றுகொண்டு இருந்த மேலும் 2 பேர், வீட்டிற்குள் சென்று செல்வியின் மகள் பிரதீஷா (30) என்பவரை கத்தியை முனையில் மிரட்டி அவர் அணிந்திருந்த 4 சவரன் தாலி சரடு மற்றும் ஒரு மோதிரம், வீட்டிலிருந்த 5 செல்போன்கள், ₹8 ஆயிரம் ஆகியவற்றை எடுத்துக்கொண்டு வெளியே வந்தனர்
இதனிடையே, செல்வியின் அலறல் சத்தம்கேட்டு பக்கத்து வீட்டில் இருந்த வனரோஜா (43) என்பவர் ஓடிவந்தார். அவரையும் கத்தி முனையில் மிரட்டிய ஆசாமிகள், அவரிடம் இருந்து 2 தங்க மோதிரங்களை பறித்துக்கொண்டு, வீட்டின் பின்புறமாக சுவர் ஏறி குதித்து தப்பினர்.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து எம்கேபி நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை எம்கேபி நகர் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் எம்கேபி நகர் பாலம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவரை மடக்கி விசாரித்தனர். அதில், அம்பத்தூர் ஒரகடம் அண்ணாசாலை 3வது தெருவை சேர்ந்த பாட்ஷா (27) என்பதும், எம்கேபி நகர் பகுதியில் மாநகராட்சி ஊழியர் போல் நடித்து நகை பறிப்பில் ஈடுபட்டவர்களில் ஒருவர் என்பது தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து 2 சவரன் செயின் மற்றும் அரை சவரன் தங்க மோதிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். தலைமறைவாக உள்ள அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர்.

Tags : jeweler ,Home News , Coroner Survey, Home News
× RELATED திருவாரூர் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கொரோனா உறுதி