×

6 ஆயிரம் ஏக்கரை குத்தகைக்கு விடுவதில் தாமதம் கோயிலுக்கு கோடிக்கணக்கில் வருவாய் இழப்பு: நிதி இல்லாமல் தள்ளாடும் அறநிலையத்துறை

சென்னை: அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களுக்கு சொந்தமான 6000 ஏக்கர் நிலங்களை குத்தகைக்கு விடாததால் கோயில்களுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.  தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் 44 ஆயிரத்து 120 கோயில்கள் உள்ளன. இதில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பிரதான கோயில்களும் அடக்கம். இக்கோயில்களுக்குச் 4.78 லட்சம் ஏக்கர் நிலங்கள் மற்றும் 50 ஆயிரம் கட்டிடங்கள் உள்ளது. இந்த நிலங்கள் மற்றும் கட்டிடங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் தான் கோயில்களின் வளர்ச்சி பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.  இந்த நிலையில் கோயில்களுக்கு சொந்தமான நிலங்கள் ஒவ்வொரு ஆண்டும் குத்தகைக்கு விடப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் மார்ச் அல்லது ஏப்ரல் மாதத்தில் இந்த குத்தகைக்கு விடப்படும். இந்த குத்தகை காலம் முடிந்த பிறகு மீண்டும் அந்தந்த கோயில் நிர்வாகம் சார்பில் ஏலம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டு குத்தகைக்கு விடப்படுகிறது.  இந்த நிலையில் தற்போது  கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து  மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களும் மூடப்பட்டன.  தற்போது கோயில்களில்  உயர் அலுவலர்களை தவிர்த்து யாரும் பணிக்கு வரவில்லை.

இதனால்  பெரும்பாலான கோயில்களில்  இந்த  ஏலம் தொடர்பான அறிவிப்புகள் இந்த ஆண்டு தற்போது வரை வெளியிடப்படாமல் உள்ளது.  குறிப்பாக, தஞ்சாவூர், திருவாரூர் நாகை, புதுக்கோட்டை  உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு விடாமல் அப்படியே போடப்பட்டுள்ளது. அதேபோன்று அந்த மாவட்டங்களில் உள்ள 20 குளங்கள் மீன் பிடிக்க ஏலம் விடப்படுவது உண்டு. ஆனால் தற்போது ஊரடங்கு காரணமாக அந்த குளங்களில் மீன் பிடிக்க ஏலம் விடப்படவில்லை. இதனால் கோயில்களுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அறநிலை துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘அறநிலையத்துறை சார்பில் கோயில் நிலங்களை குத்தகைக்கு விடுவது தொடர்பாக கமிஷனரின் ஒப்புதல் கிடைத்த பிறகுதான் ஏலம் விட முடியும். ஆனால் தற்போது ஏலம் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. இதனால் தற்போது வரை ஏலம் விட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த பிரச்னையில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் அறநிலையத்துறைக்கு  வருவாய் கிடைக்கும் என்றார்’. தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 6 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் குத்தகைக்கு விடாமல் அப்படியே போடப்பட்டுள்ளது.

Tags : Delay , leasing , 6000 acres loss , temple revenue to millions
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...