×

இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரிப்பு 6,000+ போயாச்சு... இப்போ 8,000... உலக அளவில் 7வது இடத்திற்கு முன்னேறியது

புதுடெல்லி: நாட்டில் கொரோனாவால் பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,82,143 ஆக உயர்ந்துள்ளது. கடந்த வாரம் வரை தினமும் 6 ஆயிரத்துக்கு மேல் இருந்த பாதிப்பு எண்ணிக்கை, கடந்த 2 நாட்களாக 8 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கொரோனா பாதிப்பும், இறப்பும் நாளுக்கு நாள் அதிகமாகி வருகிறது. நேற்று முன்தினம் ஒரேநாளில் முதல் முறையாக 8 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், நேற்று இந்த பாதிப்பு எண்ணிக்கை 8,380 ஆக உயர்ந்தது. இதனால், பாதித்தோரின் எண்ணிக்கை 2வது நாளாக 8 ஆயிரத்தை கடந்துள்ளது. தற்போது, பாதிக்கப்பட்டவர்களில் 89,995 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

86,983 பேர் குணமடைந்து வீட்டிற்கு சென்றுள்ளனர். நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 4,614 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவர்களின் சதவீதம் 47.76 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை வருமாறு: நாட்டில் கொரோனா தாக்கத்தினால் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 193 பேர் இறந்துள்ளனர். இதில், மகாராஷ்டிராவில் அதிகபட்சமாக 99, குஜராத்தில் 27, டெல்லியில் 18, ராஜஸ்தான், மத்திய பிரதேசத்தில் தலா 9, தமிழ்நாட்டில் 6 பேர் இறந்துள்ளனர். இதுவரை, அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 2,197 பேரும், குஜராத்தில் 1,007 பேரும் இறந்துள்ளனர்.

நேற்றைய நிலவரப்படி நாடு முழுவதும் பலியானோர் எண்ணிக்கை 5,164 ஆக இருந்தது. இதேபோல், மகாராஷ்டிராவில் இதுவரை 65,168 பேர் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டில் 21,184, டெல்லியில் 18,549, குஜராத்தில் 16,343 பேர் பாதித்துள்ளனர். நேற்றைய நிலவரப்படி, நாடு முழுவதும் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 82,143 ஆக இருந்தது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இதற்கிடையே, கொரோனா பாதித்த உலக நாடுகள் பட்டியலில் இந்தியா நேற்று 9வது இடத்திலிருந்து 7வது இடத்திற்கு முன்னேறியது. வேல்ட்ஓமீட்டர் இணையதள புள்ளிவிவரங்களின்படி, இந்தியா 1 லட்சத்து 88 ஆயிரத்து 989 பாதிப்புடன் ஜெர்மனி, பிரான்ஸ் நாடுகளை முந்தி 7வது இடத்திற்கு சென்றுள்ளது.

அடுத்த 2நாளில் லட்சம் தாண்டும்
அடுத்த 2 நாட்களில் இந்தியாவின் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : India , 6,000+ Poyaacu, Increase to 7th Worldwide
× RELATED குற்ற பின்னணியில் உள்ளவர்களை...