×

கோவை தெற்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் திடீர் கைது

பொள்ளாச்சி:  கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள சிங்கையின்புதூர் வழியாக கேரளாவுக்கு  கருங்கல் உள்ளிட்ட பொருட்களை ஏற்றி சென்ற டிப்பர் லாரிகள் அதிவேகத்தில்  செல்வதாக புகார் எழுந்தது.  இந்நிலையில் கடந்த 26ம் தேதி அந்த வழியாக  டிப்பர் லாரி வேகமாக சென்றதால் கற்கள் விழுந்ததில் சாலையில்  சென்ற தொழிலாளி ஒருவர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. அந்த வழியாக சென்ற கோவை தெற்கு மாவட்ட தி.மு.க  பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் பொதுமக்களுடன்  இணைந்து லாரிகளை சிறைப்பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.

இதையடுத்து, சட்டவிரோதமாக கூட்டம் சேர்த்ததாக கோவை தெற்கு மாவட்ட தி.மு.க  பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ் மீதும், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பற்றி அவதூறு  வீடியோ பதிவேற்றம் செய்ததாக தென்றல் செல்வராஜின் உதவியாளர் கீர்த்திஆனந்த் மீதும் அ.தி.மு.க எம்.எல்.ஏ. சண்முகம் கிணத்துக்கடவு போலீசில் புகார் அளித்தார். இதைத்தொடர்ந்து, தென்றல் செல்வராஜ், கீர்த்திஆனந்த் மீது கிணத்துக்கடவு போலீசார் வழக்கு பதிவு செய்து நேற்று முன்தினம் இரவு பொள்ளாச்சி குமரன் நகரில் 2 பேரையும் கைது செய்தனர். பின்னர், பொள்ளாச்சி மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தி ஈரோடு மாவட்டம் கோபியில் உள்ள மாவட்ட  சிறையில் அடைத்தனர்.

கொரோனா ஊரடங்கு நேரத்தில் அரசியல் காரணங்களுக்காக திமுக மாவட்ட பொறுப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுகுறித்து கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக  பொறுப்பாளர் கார்த்திக் எம்.எல்.ஏ கூறியதாவது: தென்றல் செல்வராஜ் மற்றும் அவரது உதவியாளர் பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளனர். அதுதவிர, என் மீதும்,கோவை  புறநகர் வடக்கு மாவட்ட திமுக செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன், மாநகர்  மேற்கு மாவட்ட பொறுப்பாளர்  முத்துசாமி ஆகியோர் மீதும் வழக்குகள்  பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் திமுக ஒருபோதும் அஞ்சாது. கோவையில் அதிமுகவுக்கு எதிராக தொடர் போராட்டம் நடத்த உள்ளோம் என்றார்.


Tags : arrest ,Coimbatore ,DMK , Sudden arrest , DMK chief , Coimbatore
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...