×

மகளுக்காக சேமித்த ரூ5 லட்சத்தில் ஏழைகளுக்கு நிவாரணம்: மதுரை சலூன் கடைக்காரருக்கு பிரதமர் மோடி பாராட்டு

மதுரை: கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஏழை மக்களுக்கு, தனது மகள் படிப்பு, திருமணத்துக்காக சேர்த்து வைத்த ரூ5 லட்சத்தில் நிவாரண பொருள் வழங்கிய சலூன் கடை உரிமையாளர் மோகனை பிரதமர் மோடி பாராட்டியுள்ளார். மதுரை  மாவட்டத்தில் கொரோனா தொற்று முதன் முதலில் மேலமடை பகுதியில்தான் பாதித்தது. இங்குதான் தமிழகத்தில் கொரோனாவுக்கான முதல் பலியும் ஆனது. இதனால், அப்பகுதி முழுவதும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அங்குள்ள நூற்றுக்கும் மேற்பட்ட கூலித்தொழிலாளர்கள்  2 மாதமாக வீடுகளில் முடங்கியதால் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட சிரமப்பட்டனர்.

அதனைத்தொடர்ந்து, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் தனது மகள் நேத்ராவின் எதிர்கால கல்வி மற்றும் திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த ரூ5 லட்சத்தில்  அரிசி, பருப்பு, காய்கறி உள்ளிட்ட சிறப்பு தொகுப்புகளை 1,500க்கும் மேற்பட்ட ஏழை, எளிய மக்களுக்கு வழங்கினார். இவரின் இந்தச் செயலுக்கு பிரதமர் நரேந்திர மோடி தனது  ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சி உரையின் போது பாராட்டு தெரிவித்துள்ளார். மோடி கூறுகையில், ‘‘கொரோனாவுக்கு எதிரான சேவையில் தங்களை அர்ப்பணிப்பவர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. இப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான் தமிழ்நாட்டைச் சேர்ந்த சி.மோகன்.

மதுரையில் முடிதிருத்தகம் நடத்தி வரும் இவர், தனது மகளின் படிப்பு, திருமணத்துக்காக சேமித்த ₹5 லட்சத்தை கொரோனா காலக்கட்டத்தில் ஏழைகளுக்காக செலவு செய்துள்ளார். இவரைப் போல, அகர்தலா கவுதம் தாஸ், பதான்கோட் மாற்றுத் திறனாளியான ராஜு, நாஷிக் ராஜேந்திர பிரசாத் போன்றவர்களும் உதவி உள்ளனர். இவர்களை பாராட்டி, தலை வணங்குகிறேன்,’’ என்றார். இதைதொடர்ந்து மோகனுக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து சால்வை அணிவித்தனர். மோகனின் மகள் நேத்ரா கூறுகையில், ‘‘மதுரை, வண்டியூர் மெயின் ரோட்டில் உள்ள மெட்ரிக்குலேசன் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கிறேன்.

எங்கள் குடும்பம் இதேபோன்று பசி, பட்டினியை அனுபவித்துள்ளது. எனவே, கொரோனாவால், பசித்திருப்போருக்கு உதவி செய்யுங்கள் என எனது தந்தையிடம் கோரினேன். என்னுடைய கல்விக்காக சேமித்து வைத்திருந்த பணத்தை செலவு செய்யும்படி தந்தை மோகன், தாய் பாண்டிச்செல்வியிடம் வேண்டுகோள் விடுத்தேன். எனது விருப்பத்ைத தந்தை நிறைவேற்றியுள்ளார். என் தந்தையை பிரதமர் மோடி பாராட்டியது மகிழ்ச்சி அளிக்கிறது’’ என தெரிவித்தார்.

Tags : Modi ,Madurai ,saloon shop owner , Prime Minister Modi, praise,s Madurai saloon shop owner,
× RELATED சொல்லிட்டாங்க...