×

பழுதாகி ஒரு மாதமாக சரி செய்யாததால் டிரான்ஸ்பார்மரில் கட்டில் போட்டு அமர்ந்து விவசாயி நூதன போராட்டம்: பெரம்பலூர் அருகே பரபரப்பு

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே டிரான்ஸ்பார்மர் பழுதாகி ஒரு மாதமாகியும், சரி செய்யாததால் டிரான்ஸ்பார்மரில் கட்டில்போட்டு அமர்ந்து 6 மணி நேரத்திற்கு மேல் விவசாயி போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெரம்பலூர் மாவட்டம் குன்னம் தாலுகா கோவில்பாளையம் கிராமம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் இளையராஜா (37). இவருக்கு அதே பகுதியில் புதுஏரி அருகே 4 ஏக்கரில் வயல் உள்ளது. அதில் 3 ஏக்கரில் கரும்பும், 1 ஏக்கரில் நெல்லும் பயிரிட்டுள்ளார். இதற்காக வயல் கிணற்றுக்கு மின் இணைப்பு கொடுத்து மின் மோட்டார் பயன்படுத்தி வருகிறார். இப்பகுதிக்கு கோவில்பாளையம் புதுஏரி அருகே உள்ள டிரான்ஸ்பார்மரில் இருந்து மின் வினியோகிக்கப்படுகிறது.

இதன்மூலம் 50 ஏக்கர் நிலங்களுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். இந்தநிலையில், கடந்த ஒரு மாதமாக டிரான்ஸ்பார்மர் பழுந்தடைந்துள்ளது. இதனால், மின்வினியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இளையராஜாவுக்கு கரும்பு, நெல் வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாத காரணத்தால், ரூ.2.50 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் பலமுறை மின்வாரியத்திடம் முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. நேற்று காலை 8 மணிக்கு இளையராஜா மளமளவென டிரான்ஸ்பார்மர் மீது கட்டிலுடன் ஏறினார். 10 அடி உயரத்தில் டிரான்ஸ்பார்மர் மீது கட்டிலை சமமாக வைத்துவிட்டு, அதில் அமர்ந்து கொண்டு போராட்டம் நடத்த தொடங்கினார்.

தகவலறிந்த குன்னம் மின்வாரிய இளநிலை பொறியாளர் அர்ச்சனா, இளையராஜாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு, பழுதடைந்த டிரான்ஸ்பார்மரை சரிசெய்ய நடவடிக்கை எடுக்கிறோம் என கூறியுள்ளார். இதனை தொடர்ந்து மதியம் 2 மணியளவில் 6 மணிநேர போராட்டத்தை கைவிட்டு கீழே இறங்கினார். இச்சம்பவம் சமூக வலை தளங்களிலும் பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Tags : Parambalur ,Transformer , Farmer's, new struggle after sitting in, cot , transformer , month
× RELATED தென்மேல்பாக்கம் கிராமத்தில் எலும்பு...