×

அமெரிக்காவின் ‘ஸ்பேஸ் எக்ஸ்’ தனியார் நிறுவனம் சார்பில் 2 ‘நாசா’ வீரருடன் விண்ணில் பாய்ந்தது ராக்கெட்: பூமியின் சுற்றுப்பாதையை அடைந்ததாக டிரம்ப் அறிவிப்பு

நியூயார்க்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையம் 39A-வில் இருந்து ‘ஸ்பேஸ் எக்ஸ்’ என்ற தனியார் நிறுவனத்தின் பல்கான் 9 என்ற ராக்கெட் நேற்றிரவு ஏவப்பட்டது. இந்த ராக்கெட்டில் அமெரிக்க விண்வெளி நிறுவனமான ‘நாசா’வை சேர்ந்த விண்வெளி வீரர்கள் பாப் பென்கன் மற்றும் டக் ஹர்லி ஆகியோர் சென்றிருக்கிறார்கள். முதல் கட்டமாக ராக்கெட் 25 நிமிடம் விண்ணில் பறந்தது. விண்ணிற்கு சென்றதுடன் ஒரு பகுதி தனியாக கழன்று பாதுகாப்பாக இன்ஜின் உதவியுடன் வெற்றிகரமாக தரையிறங்கியது.

இரண்டாம் கட்டமாக 6 நிமிடம் பறந்து, ராக்கெட்டை அதன் வட்டப்பாதையில் நிறுத்திவிட்டு கழன்று சென்றது. இதன் கூம்பு (க்ரூ டிராகன்) போன்ற பகுதியில்தான் விண்வெளி வீரர்கள் இருப்பார்கள். இதில் இருக்கும் ‘திரஸ்டர்’ மூலம் அவர்கள் விண்வெளி மையத்திற்கு செல்ல முடியும். சிறுசிறு இன்ஜின்கள் மூலம் அது மெல்ல மெல்ல ஸ்பேஸ் ஸ்டேசன் நோக்கி நகரும். பின்னர் அங்கு இருக்கும் வாயில் ஒன்றில் சரியாக இந்த ‘க்ரூ டிராகன்’ இணையும். எதிர்பாராதவிதமாக ராக்கெட் வெடித்தாலும், பாதிப்புகள் இல்லாமல் ‘க்ரூ டிராகன்’ தனியே பிரிந்து சென்றுவிடும்.

ஆய்வாளர்களின் கணக்குபடி நாளை இரவு சுமார் 8.30 மணியளவில் வீரர்கள் இருவரும் ஸ்பேஸ் ஸ்டேஷனில் இணையலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 9 ஆண்டுக்கு பிறகு தற்போது முதல்முறையாக மனிதர்களுடன் இந்த ராக்கெட் கிளம்பியுள்ளது. 2011ல் இருந்து நாசா தன்னுடைய விண்வெளி ராக்கெட் மூலம் மனிதர்களை விண்ணுக்கு அனுப்புவது இல்லை. ரஷ்யாவின் சோயஸ் விண்வெளி ராக்கெட்டைதான் நாசா நம்பி இருந்தது. இனி தங்கள் வீரர்களை விண்வெளிக்கு அனுப்ப ரஷ்யா மற்றும் ஐரோப்பிய நாடுகளை நாட வேண்டியதில்லை.

தற்போது 110 நாட்கள் வரை விண்ணில் இருந்து இவர்கள் ஆராய்ச்சிகளை மேற்கொள்வார்கள். ராக்கெட் வெற்றிகரமான ஏவுதலுக்குப் பின்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் வெளியிட்ட செய்தியில், ‘ஸ்பேஸ் எக்சின் டிராகன் காப்ஸ்யூல் வெற்றிகரமாக பூமியின் சுற்றுப்பாதையை அடைந்துள்ளது என்பதை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். இது, அமெரிக்க லட்சியத்தின் புதிய சகாப்தம்’ என்றார். முன்னதாக இந்த ராக்கெட் மே 27ம் தேதியே ஏவப்பட திட்டமிடப்பட்டது. ஆனால், மோசமான வானிலை காரணமாக 16.54 நிமிடங்களுக்கு முன்னர் இந்த பணி திடீரென நிறுத்தப்பட்டது.

மூன்று நாட்களுக்குப் பிறகு தற்போது ஏவப்பட்டுள்ளது. அமெரிக்க விண்வெளி வீரர்களான ராபர்ட் பெங்கன் மற்றும் டக்ளஸ் ஹர்லி ஆகியோர் ஏற்கனவே சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணம் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags : US ,SpaceX ,player ,NASA ,Earth , USA, SpaceX, NASA rocket
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...