×

நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் நாளை முதல் 50 சதவீத அரசு பஸ்கள் இயக்கம்: அரசு உத்தரவு

நெல்லை: நாளை ஜூன் 1ம்தேதி முதல் 50 சதவீத பஸ்களை இயக்க  தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதையடுத்து, நெல்லை அரசு போக்குவரத்துக் கழகத்தில் சுமார் 900 பஸ்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் 24ம்தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் மாவட்ட எல்லைகள் மூடப்பட்டன. அரசு போக்குவரத்துக் கழக பஸ்களின் இயக்கம் முழுவதுமாக தடை செய்யப்பட்டது.
இந்நிலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக அனைத்துப் பணிமனைகளிலும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

பஸ்களின் இயக்கத்தை சீராக வைக்க சுழற்சி முறையில் தொழில்நுட்ப பணியாளர்கள் தினமும் பணிமனைக்கு வந்து பஸ்களை இயக்கி, டயர்களில் உள்ள காற்றின் அளவை சரிபார்த்தும், பேட்டரிகளின் இணைப்பை துண்டித்தும், பஸ்களை தினமும் பராமரித்து வந்தனர். மேலும் அனைத்து பஸ்களுக்கும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, தொற்று பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வந்தது. இந்த 67 நாட்களும் பஸ்கள் இயக்கப்படாத நிலை தொடர்ந்து இருந்து வந்தது. இதனால் பொதுமக்கள், பயணிகள் சில இடங்களுக்கு செல்வதிலும் சிரமம் ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் 3வது ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அரசு ஊழியர்கள்,

செவிலியர்கள், துப்புரவு பணியாளர்கள் பயணிக்க அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. மேலும் 50 சதவீத அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு உத்தரவிட்டதைத் தொடர்ந்து கூடுதலாக அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் நான்காவது ஊரடங்கு இன்றுடன் முடிவடைகிறது. இதிலும் மத்திய அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது. இதில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மண்டலங்கள் தவிர, பிற மண்டலங்களில் 50 சதவீத பஸ்களை, 60 சதவீத இருக்கைகளுடன் (40 பயணிகளுடன்) இயக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கொரோனா அடிப்படையில் பிரித்த 8 மண்டலங்களில் 7வது மண்டலத்தில் உள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, 8வது மண்டலத்தில் சென்னை காவல் கட்டுப்பாட்டு மண்டலம் தவிர பிற மண்டலங்களில் பஸ்களை இயகக அறிவுறுத்தியுள்ளது. இதில் 6வது மண்டலங்களில் உள்ள மாவட்டங்களாக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் நாளை ஜூன் 1ம்தேதி முதல் பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பஸ்களை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

டிரைவர், கண்டக்டர்களுக்கு ஷிப்ட் முறையில் பணி வழங்கப்படுகிறது. காலையிலும், மாலையிலும் அரசு பஸ்களுக்கு கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கிருமி நாசினி தெளிக்கப்படுகிறது. டிரைவர், கண்டக்டர்கள் முககவசம், கையுறைகள் அணிந்து பணி செய்ய வேண்டும். பொதுமக்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும் பயணிகளை பஸ்களில் ஏற்ற வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தூத்துக்குடி
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை தூத்துக்குடியில் 2, கோவில்பட்டி, விளாத்திகுளம், திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், எட்டயபுரம் என 7 டெப்போக்கள் உள்ளன. இவற்றில் மொத்தம் 342 அரசு பஸ்கள் உள்ளன. முதற்கட்டமாக நாளை (1ம்தேதி) 118 பஸ்களை இயக்க போக்குவரத்து கழகம் முடிவு செய்துள்ளது.

Tags : Tuticorin ,Paddy , Paddy, Tenkasi, Tuticorin, Government buses
× RELATED தூத்துக்குடியில் பணப்பட்டுவாடா செய்ததாக ஒருவர் கைது!!