நாடு, மதம் கடந்த மனித நேயம்; வங்கதேச சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேதை வாலிபர்: கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு

வேதாரண்யம்: வங்கதேசத்தை சேர்ந்த ஒரு சிறுவனின் இதய அறுவை சிகிச்சைக்கு உதவிய வேதாரண்யம் வாலிபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. வங்கதேசத்தின் சட்டோக்ராம் கிராமத்தை சேர்ந்தவர் முகமது நூருல் அப்சல்-மோஹசனாபேகம் தம்பதி. விவசாயம் செய்கின்றனர். இவர்களது மகன் முகமதுஅசன் ஆரிப் (9). இச்சிறுவனின் இதயத்தில் ஓட்டை இருந்தது நான்கு வயதாக இருக்கும் போது தெரியவந்தது. ஏழ்மை, பொருளாதார நெருக்கடியால் மகனின் உடல்நலப்பாதிப்பை உடனடியாக சீரமைக்க முடியவில்லை. சிறுவனின் மாமா அப்துல் ரஹீம் ஓமன் நாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார்.

அவருடன் வேலைபார்த்த நாகை மாவட்டம் வேதாரண்யம் வள்ளியம்மை சாலை பகுதியை சேர்ந்த ராஜசேகரிடம் (36) இது குறித்து தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் மாதத்தில் விடுமுறையில் ஊர் திரும்பிய ராஜசேகர், சிறுவனை அழைத்து வர கோரியுள்ளார். இதையடுத்து சிறுவன் ஆரிப், தாய் மோஹசனாபேகம், தாய் மாமா அப்துல் ரஹீம் ஆகியோர் கடந்த மார்ச் மாதத்தில் வேதாரண்யத்தில் உள்ள ராஜசேகர் வீட்டுக்கு வந்தனர். வேதாரண்யத்தை அடுத்த செம்போடையில் செயல்படும் தனியார் மருத்துவமனை இயக்குநர் மற்றும் மருத்துவர் சுப்பிரமணியனிடம் சிறுவனை அழைத்து சென்றனர்.

இதனை சரி செய்யமுடியும் என நம்பிக்கைதெரிவித்த மருத்துவரின் பரிந்துரையின் பேரில், கோவை தனியார் மருத்துவமனைக்கு சென்று உரிய அறுவைசிகிச்சைஅளிக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான செலவினை தோப்புத்துதுறையை சேர்ந்த தொழிலதிபர் சுல்தானுல் ஆரிபா ஏற்றுக்கொண்டார். இதேபோல் வேதாரண்யம் டிஎஸ்பி சபியுல்லா, சமூக ஆர்வலர் ரஹ்மத்துல்லா மற்றும் ஒரு சில தன்னார்வலர்கள் உதவியோடு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு நடந்தது. ஆனால், கொரோனா தடுப்புக்காக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சிகிச்சை தள்ளிவைக்கப்பட்டது. இதனால், சிறுவனுடன் அவனது தாய், மாமா மூவரும் வேதாரண்யத்தில் உள்ள ராஜசேகர் வீட்டில் தங்கியிருந்தனர்.

இதையடுத்து, கோவையில் சிறுவன் ஆரிப்புக்கு அண்மையில் இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது அறுவை சிகிச்சை முடிந்து வேதாரண்யத்தில் தங்கியுள்ள இவர்கள் விரைவில் தாயகம் செல்லவுள்ளனர். வங்கதேசத்திலிருந்து வந்தவர்களுக்கு சுமார் மூன்று மாதங்கள் உணவுஅளித்து, தங்க இடமளித்து உதவியதோடு, அந்த குடும்பத்தினர் நோன்பு கடைபிடிப்பதற்கான ஏற்பாடுகளையும் ராஜசேகர் குடும்பத்தினர் செய்து கொடுத்தனர். கடல் கடந்து பிழைப்புக்கு சென்ற இடத்தில் ஏற்பட்ட நட்பு, மத பாகுபாடு இல்லாமல் தேசம் கடந்து நடந்துள்ள இந்த மனித நேயப்பணியை செய்த ராஜசேகரையும் அவரது குடும்பத்தினரையும் பலரும் பாராட்டியும், சிறுவனை நலம் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

>