×

கொரோனா ஊரடங்கால் கோடிக்கணக்கில் நஷ்டம்

* ஆன்மிக சுற்றுலா தொழில் அடியோடு பாதிப்பு
* சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் பரிதவிப்பு
* பல லட்சம்  பக்தர்கள் வரை குவியும் ராமேஸ்வரத்தில், கொரோனா ஊரடங்கினால் ஆன்மிக சுற்றுலா தொழில் அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது.
* பல நூறு கோடி வரை தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், சிறு வியாபாரிகள், தொழிலாளர்கள் என ஆயிரக்கணக்கானோர் வாழ்வாதாரம் இழந்து பரிதவிக்கின்றனர்.

ராமேஸ்வரம்: இந்தியாவின் முக்கிய ஆன்மிக தலங்களில் ஒன்றாகவும் தேசிய சுற்றுலாத்தலமாகவும் விளங்கி வரும் ராமேஸ்வரத்தில் ஆன்மிக சுற்றுலாவும், மீன் பிடித்தலும்தான் பிரதான தொழிலாக விளங்கி வருகிறது. ராமேஸ்வரம், தனுஷ்கோடி கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு திதி கொடுத்து, ராமநாதசுவாமியை தரிசித்தால் பாவங்கள் போய் புண்ணியம் கிடைக்கும் என்பது ஐதீகம். இதனால் சராசரியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள இங்கு தீர்த்தமாட வருகின்றனர். காண கண்கோடி வேண்டும்...ஆடி அமாவாசை, தை அமாவாசை போன்ற முக்கிய நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் தீர்த்தமாட  ராமேஸ்வரம் வந்து செல்வது வழக்கம். தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப்பயணிகள், தனுஷ்கோடி, கோதண்டராமர் கோயில், கெந்தமாதன பர்வதம், குந்துகால் விவேகானந்தர் நினைவு மண்டபம், பாம்பன் பாலம், கலங்கரை விளக்கம், கலாம் நினைவிடம் உள்ளிட்ட பல இடங்களை பார்த்து மகிழ்வர். கோதண்டராமர் நீர்த்தேக்கத்தில் ஆண்டுதோறும் வந்து தங்கி செல்லும் பலவகையான பறவைகளை, பார்த்து ரசிப்பதற்கென்றே பள்ளி மாணவர்களும் அதிகளவில் வந்து செல்வர். இத்தனை இடங்களையும் கண்டு ரசிக்க கண் கோடி வேண்டும்.

குதூகலம் குலைந்தது...
வாழ்க்கையில் ஒருமுறையாவது காசி, ராமேஸ்வரம் செல்ல வேண்டும் என்று விரும்புபவர்களின் எண்ணத்தையும், கடல், படகு சவாரி, வெளிநாட்டு பறவைகளின் அணிவகுப்பு என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை குதூகலப்
படுத்தும் எண்ணற்ற இடங்களையும் உள்ளடக்கிய ராமேஸ்வரம் கொரோனாஊரடங்கினால் அடங்கிப்போனது.

நாடு முழுவதும் ரயில், விமானம், பஸ் என பொதுப்போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக ராமேஸ்வரத்திற்கு பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வருகையின்றி, ஒட்டுமொத்த ஆன்மிக சுற்றுலா தொழிலும் முடங்கிவிட்டதால் ராமேஸ்வரம் நகரில் மட்டும் பல நூறு கோடி ரூபாய் அளவில் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ஆயிரம் குடும்பங்கள் அவதி
தீர்த்தமாடுதல், யாத்திரை சேவைப்பணி, கடற்கரை புரோகிதம் இவை அனைத்தும் நின்று போனதால், இதன் மூலம் கிடைக்கும் வருவாயை நம்பியுள்ள ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வருவாயின்றி தவித்து வருகின்றனர். தங்கும் விடுதிகள், ஓட்டல்கள், ஆட்டோ, சுற்றுலா வாகனங்கள், தேநீர் கடைகள், பூஜை பொருள் விற்பனை, சங்கு, சோவி கடைகள், கைவினைப்பொருள் உற்பத்தி, சாலையோர கடைகள் என அனைத்து இயக்கமும் முடங்கியதால் இதனை நம்பியுள்ள பல ஆயிரம் குடும்பத்தினர் வருவாயிழந்து கஷ்டப்பட்டு வருகின்றனர். மக்கள் அன்றாட தேவைக்கான பொருட்களை வாங்கும் சக்தியை இழந்துள்ளதால், கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையில் மளிகை, காய்கறி கடைகளில் விற்பனை மிகவும் குறைந்து விட்டதாக உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

வருபவர்களை எதிர்நோக்கி...
ராமேஸ்வரம் கடலில் புனித தீர்த்தமாட வரும் பக்தர்களுக்கு தர்ப்பண காரியம் செய்து வைத்தல், கோயிலுக்குள் தீர்த்தம் ஊற்றுதல், வடமாநில சுற்றுலாப்பயணிகளுக்கு வழிகாட்டுதல், தேங்காய், பழம், மாலை, பூஜை பொருட்கள் விற்றல், பசுக்களுக்கு தானம் செய்ய கீரை விற்றல் என பக்தர்கள் சார்ந்த தொழிலில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சங்கு, சோவி, பாசி அலங்கார பொருட்கள் விற்பனை, தேநீர் கடைகள், சாலையோர டிபன் கடை நடத்துதல் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகளை நம்பி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

சுழலாத வாழ்க்கை சக்கரம்
பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளுக்காக ராமேஸ்வரம் நகரில் மட்டும் பெரிதும், சிறியதுமாக 300க்கும் மேற்பட்ட தங்கும் விடுதிகள், காட்டேஜ்கள், 100க்கும் மேற்பட்ட உணவு விடுதிகளும் 2 மாதங்களாக பூட்டப்பட்டதால் இதன் உரிமையாளர்கள், பணியாற்றிய ஊழியர்கள் என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுமட்டுமின்றி பொது ஊரடங்கினால் வெளியூர்களில் இருந்து ராமேஸ்வரம் வரும் சுற்றுலாப்பயணிகள் மற்றும் பக்தர்களின் வசதிக்காக, ராமேஸ்வரத்தில் ஓடிக்கொண்டிருந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆட்டோ, கார், வேன் உள்ளிட்ட சுற்றுலா வாகனங்களின் இயக்கமும் கடந்த 60 நாட்களாக நின்றதால், இதனை நம்பியுள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களின் வாழ்க்கை சக்கரம் சுழல்வதிலும் தடை ஏற்பட்டுள்ளது. மொத்தத்தில் ராமேஸ்வரத்தில் ஆன்மிகம் மற்றும் சுற்றுலா தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வந்த 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் அன்றாட வருவாய் இழந்ததுடன், இருந்த சேமிப்பும் கரைந்து போனதால் அடுத்து என்ன செய்வதென்று தெரியாமல் விழிபிதுங்கி நிற்கின்றனர்.

இயல்பு நிலை எப்போது?
ஆன்மிக சுற்றுலா மற்றும் மீன்பிடி என 2 பிரதான தொழில்கள் முடங்கியதால், மாற்றுத்தொழில்கள் எதுவுமின்றி ஒட்டுமொத்த வருவாயும் இழந்து ராமேஸ்வரம் மக்கள் தவித்து வருகின்றனர். மக்களிடம் கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்து, நோய் அச்சம் நீங்கி வெளியூர் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்து அதிகளவில் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள் வந்தால் மட்டுமே ராமேஸ்வரம் பழைய நிலைக்கு திரும்பும். இவ்வாறு நடந்தால் மட்டுமே கோயில், தீர்த்தமாடுதலை, சுற்றுலாவை நம்பியுள்ள உள்ளூர்வாசிகளின் வாழ்க்கையும் இயல்பு நிலைக்கு திரும்பும்.

ரயில் சேவை துவங்கினால்...
ராமேஸ்வரத்திற்கு நாள்தோறும் வெளியூர்களில் இருந்து ஏராளமான சுற்றுலா வாகனங்களிலும், நீண்ட தூர வாராந்திர  ரயில்கள் உட்பட ராமேஸ்வரத்திற்கு இயக்கப்பட்ட அனைத்து ரயில் சேவைகளும் துவங்கப்பட்டு பயணிகள் அதிகளவில்  வரவேண்டும். இது நடந்தால்தான் பூட்டப்பட்ட தங்கும் விடுதிகள், வர்த்தக நிறுவனங்கள், உள்ளூர் வாகன போக்குவரத்து மீண்டும் இயங்கும். தற்போதைய சிரம நிலையில் இருந்து மீள முடியும். சுற்றுலாப்பயணிகள் தீவில் அமைந்துள்ள பல்வேறு இடங்களை பார்க்க செல்வதன் மூலம் மக்களின் அன்றாட தொழில் நடப்பதுடன், வருவாய் கிடைத்து வாழ்வாதாரமும் சீரடையும்.இந்நிலை உருவாக பல மாதங்க்ள் பிடிக்கும் என்று கூறப்படுகிறது. ஊரடங்கு முடிந்து தமிழகத்தின் மற்ற பகுதிகள் இயல்பு நிலைக்கு திரும்பி முடங்கிய தொழில்கள் துவங்கினாலும், ராமேஸ்வரத்தில் ஆன்மிக, சுற்றுலா தொழில் முடக்கம், மக்களின் கஷ்டம் தொடர்ந்து நீடிக்கும் சூழ்நிலையே இங்கு நிலவுகிறது.

‘வைரஸ் அழித்த வாழ்வாதாரம்’ கொரோனா ஊரடங்கினால் அன்றாட வருவாய் இழந்து கஷ்டப்பட்டு வரும் மக்களின் கருத்துக்கள்:

அக்னி தீர்த்த கடற்கரை புரோகிதர் சுரேஷ்: ஊரடங்கால் இருக்கின்ற சேமிப்பும் கரைந்து வருகிறது. ஊரடங்கு முடிந்தாலும் உடனடியாக பக்தர்கள் வருவது நிச்சயமில்லை. வந்தாலும் குறைவாகத்தான் இருக்கும் என்பதால் இந்த ஆண்டு முழுவதும் வாழ்க்கை தடுமாற்றம்தான்.

யாத்திரை பணியாளர் வெள்ளைச்சாமி: கோயிலையும் தீர்த்த்தையும் நம்பித்தான் வாழ்க்கை நடத்துகிறோம். பக்தர்கள் வராததால் சாப்பாட்டுக்கு வட்டிக்கு கடன் வாங்கி செலவழிக்கிறோம். என்ன மாதிரி அதிகம் பேர் இருக்காங்க... ராமநாத சுவாமிதான் வழிகாட்டணும்.

தங்கும் விடுதி உரிமையாளர் விஜி: சுற்றுலாப்பயணிகள் வராமல் 2 மாதமாக விடுதிகளை பூட்டியாச்சு. வருவாய் நின்னு போச்சு... ஊழியர்களுக்கு பாதி சம்பளம்தான் கொடுக்கிறோம். ஊரடங்கு முடிந்து பக்தர்கள் வந்தாலும் விடுதியை புதுப்பித்து பாராமரிப்பு செய்து மீண்டும் திறப்பதற்கே பல லட்சம் ரூபாய் செலவாகும். கஷ்டம் தான்.

உணவு விடுதி உரிமையாளர் முனியசாமி: இங்கு வரும் யாத்திரீகர்களையும், சுற்றுலா பயணிகளையும் நம்பித்தான் கடை நடத்துறோம். இரண்டு மாதமா பூட்டியாச்சு.
கடன் வாங்கி நாட்களை கடத்துறோம். வேலையாட்கள் அனைவரும் ஊருக்கு போயிட்டாங்க. ஊரடங்கு முடிந்து கடை திறந்தாலும் கடைக்கு ஆள் சேர்த்து வியாபாரம் பார்ப்பது சிரமம் தான்.

கோயில் திறந்தால்தான் எங்க வாழ்க்கை ஓடும்
சாலையோர டீக்கடை உரிமையாளர் ராமு: கோயிலை சுற்றி நடமாடும் பக்தர்கள், சுற்றுலாப்பயணிகள், உள்ளூர்வாசிகளை நம்பித்தான் கடை நடத்தி வந்தேன். தற்போது ஆள் நடமாட்டமின்றி போனதால் இரண்டு மாதமாக கடையை பூட்டி விட்டேன். கோயில் திறந்து முன்புபோல் பக்தர்கள் வந்தால்தான் எங்க வாழ்க்கை ஓடும்.பூக்கடை கோவிந்தராஜன்: ஊரடங்கு தளர்த்தப்பட்டதற்கு பின் கடை திறந்தேன். வீடுகளுக்கு, கடைகளுக்கு தேவையான பூ, மாலை மட்டும் உள்ளூர்வாசிகள் வாங்கி செல்கின்றனர். இதனால் வெளியூரில் இருந்து வாங்கி வரப்படும் பூக்கள் பல நாட்கள் விற்பனையாகாமல் காய்ந்துபோய் கழிவாகிறது. வருவாய் இல்லாமல் போனதுடன், கடை திறப்பதால் நஷ்டமும் ஏறபடுகிறது. மீண்டும் கோயில் திறந்து பக்தர்கள் கோயிலுக்கு செல்லத்துவங்கினால்தான் எங்களது குடும்பம் பசியாறும்.

வாகன ஓட்டிகள் வழி புரியாமல் தவிப்பு

சுற்றுலா வேன் டிரைவர் சுல்தான்: சுற்றுலாப்பயணிகள் வராததால் சம்பாத்தியம் இல்லாம சும்மா இருக்கோம். சாப்பாட்டுக்கு கஷ்டப்படுறோம். அன்றாடம் கிடைக்கிறத வச்சி வாழ்க்கை நடத்தினோம். வேறு தொழிலுக்கும் போக முடியல. எந்த வழியும் தெரியாம சுத்துது வாழ்க்கை சக்கரம். வங்கிக்கடனையும் கட்டமுடியல. இது எப்ப முடியும்னு தெரியலை.

ஆட்டோ டிரைவர் ராஜகுரு: ராமேஸ்வரத்தில ஏராளமான ஆட்டோக்கள் ஓடுது. எல்லோரும் சுற்றுலாப்பயணிகளை நம்பித்தான் இருக்கோம். உள்ளூர் மக்கள் ஆட்டோ பயன்படுத்துவது குறைவு. அரசு நிவாரணம் வழங்க வேண்டும்.

கடல் சங்கு, பாசி விற்பனையாளர் நம்புராஜன்: பையில சங்கு, சோவி, பாசிமாலை வைச்சிக்கிட்டு கோயில், கடற்கரைன்னு சுத்தி வந்தா பக்தர்கள் ஏதாவது வாங்கிட்டு போவாங்க. தினமும் ரூ.250 வரை கிடைக்கும். கூட்ட நேரத்தில் அதிகமா கிடைக்கும். இப்ப பைசா காசுக்கு வழியில்லாம சாப்பாட்டுக்கே கஷ்டப்படுறோம். கோயில் திறந்தால்தான் எங்களுக்கு ஏதாவது கிடைக்கும்.

சங்கில் பெயர் பொறிக்கும் நபர் ராமலிங்கம்: தினம் நூறு சங்கிலாவது பெயர் எழுதிக்கொடுப்போம். சந்தோசமா வாங்கிட்டுப்போவாங்க. தினமும் 300 ரூபாய் வரைக்கும் வருவாய் கிடைச்சது. இப்போ எதுவும் இல்லை. எப்போ முடிவுக்கு வரும்னு தெரியலை.

சாலையில் போட்டோ விற்பனை செய்யும் சுரேந்தர்: சாமி படம், ஆல்பம் விற்பனை செய்தால் ஒரு நாளைக்கு 200 முதல் 300 ரூபாய் வரை கிடைக்கும். இப்போ எதுவும் இல்லாம கஷ்டப்படுறோம். ராமேஸ்வரத்துக்கு முன்பு போல பக்தர்கள் அதிகமா வரமாட்டாங்கன்னு சொல்றாங்க. என்ன பண்றதுன்னு தெரியல.

கடற்கரையில் கீரை விற்பனை செய்யும் பெண் சத்யா: தீர்த்தமாடி முன்னோர்களுக்கு திதி கொடுப்பவர்கள் அகத்திக்கீரை வாங்கி பசு மாட்டிற்கு கொடுப்பார்கள். கடற்கரையில் அதிகளவில் பக்தர்கள் தீர்த்தமாட வந்தால் நூறு கட்டுகள் வரை விற்பனையாகும். ரூ.300 வரை  கிடைக்கும். தறபோது ஊரடங்கினால் செலவுக்கு பணம் இல்லாமல் கஷ்டப்படுறோம்.

மீன்பிடித் தொழிலிலும் மீளமுடியாத நிலைமை
ராமேஸ்வரத்திற்கு மற்றொரு வருமானமிக்க தொழிலான மீன்பிடித்தொழிலும், ஊரடங்கால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இடையில் மீன்பிடி தடைக்காலமும் சேர்ந்து விட்டதால் ஆயிரக்கணக்கான மீனவர்களின் குடும்பங்கள் அன்றாட வருவாய்க்கு கூட வழியின்றி பரிதவித்தனர். தற்போது நாளை (ஜூன் 1) முதல், விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்லலாம் என்றாலும், இறால், நண்டு ஏற்றுமதி நிறுவனங்கள் திறக்கப்படாததால், ஜூன் 15க்கு பிறகே மீனவர்கள் கடலுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். அப்போது சென்றாலும் பெரிய அளவில் லாபம் கிடைக்க வாய்ப்பில்லை என மீனவர்கள் தரப்பில் புலம்புகின்றனர்.

Tags : Corona , Corona currencies , millions
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...