×

தொடரும் கன மழையால் பூங்காக்களில் மலர்கள் உதிர்கின்றன

ஊட்டி : ஊட்டியில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது பெய்து வரும் கன மழையால் தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் உள்ள மலர்கள் உதிரத் துவங்கியுள்ளன. கடந்த ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கோடை வெயிலை தணிக்கவும் விடுமுறையை கொண்டாடவும் ஏராளமான சுற்றலா பயணிகள் ஊட்டிக்கு வருவது வழக்கம். குளு குளு சீசன் அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்க ஊட்டியில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, குன்னூர் பழக்கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். ஊட்டி தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சிக்காக 35 ஆயிரம் தொட்டிகள் தயார் செய்யப்பட்டிருந்தன. அதே போல் பூங்கா முழுவதிலும் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு மலர்கள் பூத்து குலுங்கின. ஆனால், இம்முறை கொேரானா வைரஸ் தொற்று பரவல் காரணமாக மலர் கண்காட்சி உட்பட அனைத்து கண்காட்சிகளும் ரத்து செய்யப்பட்டன. எனினும், தாவரவியல் பூங்கா மற்றும் ரோஜா பூங்காவில் மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டிருந்தன. நீலகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது காற்றுடன் கூடிய மழை பெய்கிறது. இதனால், பூங்காவில் வைக்கப்பட்டுள்ள மலர் செடிகள் மற்றும் மலர்கள் அழுக துவங்கியுள்ளன.

பெரும்பாலான இடங்களில் வைக்கப்பட்டிருந்த டேலியா மலர் அழுகி உதிர்கின்றன. மலர் தொட்டிகளில் வைக்கப்பட்டுள்ள மேரி கோல்டு மலர்களும் அழுக துவங்கியுள்ளன. இதே போல் ரோஜா பூங்காவிலும் பெரும்பாலான ரோஜா மலர்கள் அழுகி உதிர்ந்து வருகின்றன. ரோஜா மலர்கள் அழுகி உதிர்வதால் பெரும்பாலான செடிகள் மலர்கள் இன்றி காணப்படுகிறது. ரோஜா பூங்கா மற்றும் தாவரவியல் பூங்காவில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இம்முறை அனைத்து பூங்காக்களிலும் மலர்கள் அதிகமாக காணப்பட்டது. ஆனால், கொரோனா பாதிப்பு காரணமாக சுற்றுலா பயணிகள் எவருமே மலர்களை கண்டு ரசிக்க முடியாமல் போனது குறிப்பிடத்தக்கது.குன்னூர்: குன்னூர் சிம்ஸ் பூங்காவில் ஆண்டுதோறும் மே இறுதி வாரத்தில் கோடை விழாவின் ஒரு பகுதியாக பழக் கண்காட்சி நடத்தப்பட்டு வந்தது. இதில் மாவட்டத்தில் விளையக்கூடிய  பாரம்பரிய மிக்க பழங்கள் இடம் பெறும்.

மேலும் கோடை சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகள் கண்டு மகிழ்வதற்காக சிம்ஸ் பூங்காவில்  ஜனவரி மாதம் 2.50 லட்சம் மலர் நாற்றுக்கள்  நடவு செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா பாதிப்பு காரணமாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பூங்கா மூடப்பட்டது. தொடர்ந்து சமூக இடைவெளியுடன் பூங்காவில் பராமரிப்பு பணிகள் நடந்து வந்தன. இந்நிலையில், பிரஞ்ச் மேரிகோல்டு, ஸ்வீட் லில்லியம், சால்வியா, பேன்சி, டேலியா, ரோஜா உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட வகை மலர்கள் கொத்து கொத்தாக பூத்து குலுங்கின. ஊரடங்கால் சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் மூடப்பட்டதோடு, போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் சுற்றுலா பயணிகள் வண்ண,வண்ண மலர்களை கண்டு ரசிக்க முடியவில்லை. இந்நிலையில் கடந்த 3 நாட்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிம்ஸ் பூங்காவில் பூத்திருந்த மலர்களும் அழுக தொடங்கியது. இதனால் சிம்ஸ் பூங்கா பொலிவின்றி காணப்படுகின்றது.

Tags : parks ,liquor burglary , Rs 48,000 worth ,liquor burglary pierced , wall of task force:
× RELATED தொடர்மழையால் கொடைக்கானலுக்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைவு