×

சுற்றுலா பயணிகள் பாதுகாப்பிற்காக குரங்கு அருவியில் தடுப்பு கம்பி அமைப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியை அடுத்த குரங்கு அருவியில், சுற்றுலா பயணிகள் வசதிக்காக தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நிறைவடைந்துள்ளதாக வனதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.    பொள்ளாச்சியை அடுத்த ஆழியார் அணையில் இருந்து, வால்பாறை செல்லும் வழியில் குரங்கு அருவி உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் அமைந்துள்ள குரங்கு அருவிக்கு சுற்றுலா பயணிகள் அதிகம் வந்து செல்கின்றனர். இந்த அருவியில் பருவமழை சீசனான ஜூன், ஜூலை, ஆகஸ்ட், நவம்பர், டிசம்பர் மாதங்களில் தண்ணீர் அதிகளவில் கொட்டும்.    வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குரங்கு அருவிக்கு செல்லும் பயணிகள் மற்றும் வாகனங்களுக்கு குறிப்பிட்ட தொகை வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் வனத்துறைக்கு ஆண்டுக்கு பல லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. இந்த நிலையில் நீர்வீழ்ச்சியில் பயணிகள் குளிக்கும் பகுதியில் இருந்த தடுப்பு கம்பிகள் சேதமானது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியானது.

 இதையடுத்து கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு, சுற்றுலா பயணிகள் வசதிக்காக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டது. ஆனால், அந்நேரத்தில் பெய்த கன மழையால், காட்டாற்று வெள்ளத்தில் கம்பிகள் அடித்து செல்லப்பட்டது. இதனால், தடுப்பு கம்பிகள் இல்லாமல் மீண்டும் சுற்றுலா பணிகள் அவதிப்பட்டனர். கடந்த மார்ச் மாதம் துவக்கத்திலிருந்து குரங்கு அருவியில் தண்ணீர் வரத்து நின்றது. இதையடுத்து அங்கு பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.  இதற்கிடையே, கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக மார்ச் மாதம் 25ம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவால், குரங்கு அருவியருகே சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இல்லாமல் இருந்தது. இதையடுத்து குரங்கு அருவியில் மீண்டும் தடுப்பு கம்பிகள் அமைக்கும் பணி நடைபெற்றது. தற்போது அப்பணி  முழுமையாக நிறைவடைந்துள்ளது.  வரும் நாட்களில் ஊரடங்கு முழுமையாக நிறைவடைந்தாலும், தண்ணீர் வரத்து இருந்தால் மட்டுமே சுற்றுலா பயணிகள் அருவி பகுதிக்கு அனுமதிக்கப்படுவார்கள் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Tags : Monkey Falls , Block wire system , Monkey Falls, protection of tourists
× RELATED சாத்தான்குளம் இரட்டைக்கொலையில்...