×

பட்டிவீரன்பட்டி பகுதியில் கொரோனாவால் குறைந்தது மா விலை: விவசாயிகள் கவலை

பட்டிவீரன்பட்டி: கொரோனா தடுப்பு ஊரடங்கால் பட்டிவீரன்பட்டி பகுதியில் மாங்காய்களை வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களுக்கு அனுப்ப முடியாததால் குறைந்த விலையே கிடைக்கிறது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், மருதாநதி அணை, சித்தரேவு, தேவரப்பன்பட்டி, சித்தையன்கோட்டை, நரசிங்கபுரம், தண்டிக்குடி மலையடிவாரம், கோம்பை உள்ளிட்ட பகுதிகளில் மா விவசாயம் ஆயிரக்கணக்கான ஹெக்டேர் பரப்பளவில் நடந்து வருகிறது. ஆண்டுதோறும் மா சீசன் ஏப்ரல் மாதம் துவங்கி ஆகஸ்ட் மாதம் வரை இருக்கும். இப்பகுதியில் காசா, கல்லாமை, செந்தூரம், காளைபாடி, சப்போட்டா, கிரேப், மல்கோவா, இமாம்பஸ் போன்ற ரக மாம்பழங்கள் அதிகம் விளைவிக்கப்படுகின்றன. இந்த ஆண்டிற்கான சீசன் ஏப்ரலில் துவங்க வேண்டும். ஆனால் பருவம் தவறிய மழையால் மரத்தில் பூத்த பூக்கள் அனைத்தும் உதிர்ந்து விட்டன. மேலும் அதிக வெப்பத்தால் பிஞ்சுகள் மரத்தில் தங்காமல் உதிர்வது, நோய் தாக்குதல், பூக்கள் கருகியது போன்ற காரணங்களால் இந்த ஆண்டு மகசூல் வெகுவாக குறைந்து விட்டது. இதனால் இப்பகுதியில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 90 சதவீத மாமரங்கள் காய்க்கவில்லை. 10 சதவீத மரங்கள் மட்டுமே காயத்துள்ளன. அதுவும் உயர்ரக மாமரங்கள் காய்க்கவில்லை. மேலும் தற்போது கொரோனா பாதிப்பால் காய்த்த மாங்காய்களை வாங்க வெளியூர் வியாபாரிகளும் வரவில்லை. இதனால் மா விலை கடும் வீழ்ச்சியடைந்து விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் கூறுகையில், ‘தற்போது துவங்கிய மாம்பழ சீசன் போதிய வரத்தின்றி குறுகிய நாட்களிலேயே முடியும் தருவாயில் உள்ளது. இதனால் போதிய வருமானமின்றி மா விவசாயிகளும், மா மரங்ளை விவசாயிகளிடமிருந்து குத்தகைக்கு எடுத்தவர்களுக்கும் பாதிக்கப்படைந்துள்ளனர். அய்யம்பாளையம், சித்தரேவு போன்ற ஊர்களில் தற்காலிக பெரிய கூரை வேய்ந்த பெரிய குடோன் அமைத்து மாங்காய்களை விவசாயிகளிடமிருந்து உள்ளூர் வியாபாரிகள் கொள்முதல் செய்து வெளிமாநிலங்கள், வெளிமாவட்டங்களுக்கு மாம்பழ கூழ்தயாரிப்பதற்கும், ஊறுகாய் தயாரிப்பதற்கும் தொழிற்சாலைகளுக்கு அனுப்பி வருவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டும் குடோன்கள் அமைத்து மாங்காய்கள் கொள்முதல் செய்யும் பணி நடந்து வருகிறது. ஆனால் பொது போக்குவரத்து இல்லாததால் குஜராத், கேரளா போன்ற வெளிமாநிலங்களுக்கும், கிருஷ்ணகிரி, திருப்பூர், கோவை போன்ற வெளிமாவட்டங்களுக்கும் அனுப்ப முடியவில்லை.

மத்திய அரசின் 100 நாட்கள் வேலை திட்டத்தால் கூலி வேலை ஆட்கள் கிடைப்பது சிரமமாகி வருவதுடன், கூலியும் உயர்ந்து கொண்டே வருகின்றது. மாமரங்களை பராமரித்து வளர்த்து அதன்பின் அதனை மரங்களிலிருந்து பறித்து கொண்டு வந்து குடோன்களில் சேர்ப்பது வரை கணக்கு பார்த்தால் நஷ்டம் தான் ஏற்படுகின்றது. பராமரிப்பு லவுகள் கூடுகின்றன. ஆனால் விலை சரிவில் தான் உள்ளது. இந்த ஆண்டு கல்லாமை ரக மாங்காய்கள் ரூ.15 வரையிலும், காசா வகைகள் ரூ.40 வரையிலும் விலை போகின்றன. இது கட்டுபடியாகாத விலையாகும்.எனவே பாதிக்கப்பட்ட மாவிவசாயிகளுக்கு அரசு நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

Tags : Corona ,Area ,Pattiviranpatti ,Pattiviranpatti Area , Low Mango Price, Corona, Pattiviranpatti Area, Farmers Concern
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...