×

ஊரடங்கால் வேலையின்றி வறுமை மேற்கு வங்க தம்பதி தூக்கிட்டு தற்கொலை: தாம்பரம் அருகே பரிதாபம்

தாம்பரம்: மேற்கு வங்கத்தை சேர்ந்த இளம் தம்பதியினர், பிழைப்பு தேடி கடந்த மார்ச் மாதம் 23ம் தேதி சென்னை வந்தனர். இவர்கள், தாம்பரம் அருகே தங்கியிருந்த நண்பர்கள் உதவியுடன் சேலையூர் அருகே மப்பேடு பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கினர். வீட்டில் குடியேறிய மறுநாளே கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்ததால், வேலை கிடைக்காமல் தம்பதி வறுமையில் அவதிப்பட்டனர். இதனிடையே, கிடைக்கும் சிறு சிறு வேலைகளை செய்து அவர்கள் சாப்பிட்டு வந்தனர். சமீபத்தில் இவர்களது நண்பர்கள் சொந்த ஊருக்கு சென்ற நிலையில், இவர்கள் மட்டும் சொந்த ஊர் செல்ல விருப்பமின்றி, ஊரடங்கு முடிந்தால், ஏதேனும் வேலை செய்து பிழைத்துக் கொள்ளலாம் என தங்களது வீட்டிலேயே காலத்தை கடத்தினர்.

ஆனால், போதிய வருவாய் இல்லாததால், சாப்பிடுவதில் கூட சிரமம் ஏற்பட்டது. இதனால், இருவரும் வீட்டில் இருந்து வெளியில் வருவதை கூட தவிர்த்துள்ளனர். இந்நிலையில் நேற்று இவர்களது வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதால், அக்கம் பக்கத்தினர் சென்று பார்த்துள்ளனர். அங்கு, ஒரே புடவையில் தம்பதி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரிந்தது. இதுபற்றி சேலையூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில், போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து, சடலங்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்த தம்பதிகள் பெயர், விவரங்கள் தெரியாததால் அந்த பகுதியில் இருக்கும் மேற்கு வங்க தொழிலாளர்களிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். ஊரடங்கால் வறுமையில் இளம் தம்பதி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


Tags : West Bengal ,suicide , Curfew, West Bengal Couple, Threatened Suicide, Tambaram
× RELATED மம்தா குறித்த சர்ச்சை பேச்சு பாஜ தலைவர் திலிப் கோஷ் மீது வழக்குப் பதிவு