×

இறந்த முயலுடன் டிக்-டாக் 3 பேருக்கு அபராதம்: வனத்துறை அதிரடி

கோவை: கோவை அருகே இறந்த முயலை வைத்து டிக்-டாக் செய்த 3 இளைஞர்களை வனத்துறையினர் கண்டறிந்து வழக்குப்பதிவு செய்து அபராதம் விதித்தனர். ஊரடங்கு காலத்தில் டிக்-டாக் மோகம் இளைஞர்களிடம் அதிகரித்துள்ளது. இந்த டிக்-டாக் வீடியோக்களில் அதிகளவிலான லைக்குகள் பெறுவதற்காக விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு டிக்-டாக் வீடியோவில் இளைஞர்கள் 3 பேர் இறந்த காட்டு முயலை கையில் வைத்து கொண்டு, அதனை நாய்கள் பிடிப்பது போன்ற வீடியோ வெளியிட்டனர். இதனை சென்னையில் பார்த்த வனத்துறையினர் சம்பவம் குறித்து விசாரிக்க அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் வனத்துறையினர் தேடி வந்தனர்.

விசாரணையில், அந்த இளைஞர்கள் மெட்டுவாவி என தெரியவந்தது. இதனையடுத்து வனத்துறையினர் கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அடுத்த மெட்டுவாவிக்கு சென்று விசாரித்து டிக்-டாக் வீடியோவை பதிவு செய்த 3 இளைஞர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில், 3 பேரும் மாணவர்கள் எனவும், மெட்டுவாவி சாலையில் இறந்து கிடந்த முயலை எடுத்து வந்து டிக்-டாக் வீடியோ எடுத்ததும் தெரியவந்தது.  பின்னர், 3 பேரிடம் இருந்தும் தலா ரூ.7 ஆயிரம் வீதம் ரூ.21 ஆயிரம் அபராதம் வசூலித்தனர். மேலும், இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் வனத்துறையினர்  எச்சரித்துள்ளனர்.


Tags : Rabbit, tik-toK, fine, forest department
× RELATED மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த...