×

சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக வழக்கு தனியார் நிலமாக இருந்தாலும் கனிமங்கள் அரசுக்கே சொந்தம்: ஐகோர்ட் கிளை நீதிபதிகள் கருத்து

மதுரை:   சட்டவிரோதமாக மணல் அள்ளுவதாக தொடரப்பட்ட வழக்கில், தனியார் நிலமாக இருந்தாலும் அதிலுள்ள கனிமம் அரசுக்கே சொந்தம் எனக்கூறியுள்ள ஐகோர்ட் கிளை, இதுதொடர்பாக அரசுத் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உலாக்குடியைச் சேர்ந்த உறங்காப்புலி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:விருதுநகர் மாவட்டம், திருச்சுழி தாலுகாவில் கிருதுமால் ஆற்றுப்படுகையில் பி.வாகைக்குளம் கிராமம் உள்ளது. இந்த பகுதியில் சவுடு மண் அள்ள சிலர் அனுமதி பெற்றுள்ளனர். ஆனால், அதிக ஆழத்திற்கு தோண்டி நூற்றுக்கணக்கான லாரிகள் மூலம் இடைவிடாமல் மணல் அள்ளுகின்றனர். இந்த நிலை தொடர்ந்தால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு, விவசாயத்துக்கான ஆழ்துளை கிணறுகள் கூட வறண்டு போகும் அபாயம் உள்ளது. கிருதுமால் ஆற்றுப்பாதையும் தடைபடும் நிலை உருவாகியுள்ளது.

எனவே, இப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் அள்ள தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், பி.புகழேந்தி ஆகியோர், ‘‘தனியார் நிலமாக இருந்தாலும் அதிலுள்ள கனிமங்கள் அரசுக்கே சொந்தம். அதன் மூலம் கிடைக்கும் வருவாய் அரசுக்கே போய் சேர வேண்டும்’’ என்றனர். பின்னர், மனுவிற்கு விருதுநகர் கலெக்டர், கனிமவளத்துறை உதவி இயக்குநர் உள்ளிட்டோர் தரப்பில், பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரம் தள்ளி வைத்தனர்.

Tags : land ,state ,branch judges , Sand, private land, minerals, Government, High Court judges Branch
× RELATED இருசக்கர வாகனத்தில் சென்றவரை தாக்கிய...