×

ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பம் பெற தனி பெட்டியை பயன்படுத்துங்கள்: போக்குவரத்து துறை கமிஷனர் உத்தரவு

சென்னை: கொரோனா வைரஸ் பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக ஆர்டிஓ அலுவலகங்களில் விண்ணப்பப்படிவங்களை பெறுவதற்கு பிரத்யேகமான தனி பெட்டியை  (டிராப் பாக்ஸ்) பயன்படுத்த வேண்டும் என போக்குவரத்துத்துறை கமிஷனர் ஜவஹர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் கொரோனா வைரஸ் 4ம் கட்ட ஊரடங்கின்போது சில தளர்வுகள் வழங்கப்பட்டது. அந்தவகையில் தமிழக அரசு கடந்த 18ம் தேதி முதல் 50 சதவீத ஊழியர்களுடன் அரசு அலுவலகங்கள் செயல்பட வேண்டும் என உத்தரவிட்டது.  இதையடுத்து ஆர்டிஓ அலுவலகங்கள் செயல்பட துவங்கின.  இந்நிலையில் ஆர்டிஓ அலுவலகங்களில் கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை குறித்து தமிழக போக்குவரத்துத்துறை கமிஷனர் ஜவஹர், அனைத்து மண்டல அலுவலகங்கள், இணை ஆணையர்கள், ஆர்டிஓ அலுவலகங்கள், மோட்டார் வாகன ஆய்வாளர் உள்ளிட்டோருக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: கோவிட்-19 பரவுதலை கட்டுப்படுத்துவதற்காக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் அறிவுறுத்தலின் கீழ் உள்துறை அமைச்சகத்தால் திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அதன்படி அங்கு ஆவணங்களை சரிபார்க்க வேண்டிய நிலை ஏற்படும் போது, அதற்காக ஒரு பிரத்யேக பெட்டியை வழங்க வேண்டும். அதில், ஓட்டுனரால் ஆவணங்கள் வைக்கப்பட்ட பிறகு, அதை பாதுகாப்பாக சுத்தம் செய்த விட்டு மோட்டார் வாகன ஆய்வாளர் சரிபார்க்க வேண்டும். இதேபோல் அனைத்து அலுவலகங்களிலும் பல்வேறு சேவைகளுக்கான விண்ணப்பப்படிவங்களை வைப்பதற்காக பிரத்யேக பெட்டியை வழங்க வேண்டும். அதிலிருந்து விண்ணப்பதை எடுத்து ஆராய்வதற்கு முன்பு, அதை கவனமாக சுத்தம் செய்ய வேண்டும். நல்ல சுகாதாரம், நடைமுறைகளை வலுப்படுத்துதல் மற்றும் தொடர்புடைய பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். நோய்வாய்ப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பை தவிர்க்க வேண்டும். அடிக்கடி தொட்ட மேற்பரப்புகளையும், பொருட்களையும் சுத்தம் செய்து கிருமி நீக்கம் செய்ய வேண்டும்.  பணி நிலையங்களை ஆழமாக சுத்தம் செய்வது தவறாமல் மேற்கொள்ளப்பட வேண்டும். இதை அனைத்து அதிகாரிகளும் பின்பற்ற வேண்டும்.

Tags : RTO Offices: Transport Department Commissioner's Directive ,Department of Transportation , RTO Offices, Application, Transport Department Commissioner
× RELATED அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்த 3...