×

கொரோனாவால் மருத்துவமனை மூடப்பட்டிருந்தாலும் பல் மற்றும் வாயை பாதுகாக்க சிகிச்சை மேற்கொள்வது எப்படி?: முகம், தாடை அறுவை சிகிச்சை நிபுணர் விளக்கம்

சென்னை: கொரோனாவால் மருத்துவமனைகள் மூடப்பட்டிருந்தாலும், பல் மற்றும் வாயை பாதுகாக்க சிகிச்சை மேற்கொள்வது எப்படி என்பது குறித்து டாக்டர் விளக்கம் அளித்துள்ளார்.முகம் மற்றும் தாடை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் செந்தில்நாதன் (அப்போலோ மருத்துவமனை) கூறியதாவது: கொரோனா நோய் கிருமி நுண்ணிய நீர் திவலைகள் மூலம் அதிகளவில் பரவக்கூடிய வாய்ப்புகள் அதிகம். இந்த நோயினால் பாதிக்கப்பட்டோரின் உடலில் இந்த வைரஸ் கிருமி பெருகி, நோயாளின் தொண்டை மற்றும் வாய் பகுதிகளில் அதிகமாக பெருகி இருக்கும். இது வைரல் லோட் என்று கூறப்படுகிறது.

அதாவது, வைரஸ் அடர்த்தி எனப்படும் உமிழ் நீரில் இந்த வைரஸ் கிருமி இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக பல்வேறு ஆய்வுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே பல் சிகிச்சை சம்பந்தமாக ஒருவர் மருத்துவமனைக்கு வந்தாலோ, மருத்துவர் சிகிச்சை அளித்தாலோ யாரேனும் ஒருவருக்கு தொற்று இருந்தால் கொரோனா தொற்று பரவக்கூடிய வாய்ப்பு அதிகமாக உள்ளது. நோயாளிகளுக்கு மிக அருகில் வைத்து சிகிச்சை அளிக்கும்போது, மிக எளிதாக  பரவுவதற்கான வாய்ப்பு உள்ளது. அனைவரும் பல் மற்றும் வாயை சுத்தமாக வைப்பதால் வைரஸ் அடர்த்தியை குறைக்க முடியும்.  

தினமும் இரண்டு முறை பல் துலக்க வேண்டும். அதைவிட மிக அவசியம் ஒரு நாளைக்கு 6 முறை வாய் கொப்பளிக்க வேண்டும். சுடு தண்ணீரில் உப்பு போட்டு கொப்பளிக்க வேண்டும். வெறும் வாயை மட்டும் கொப்பளிக்க கூடாது. தொண்டை வரை தண்ணீர் படும்படி கொப்பளிக்க வேண்டும். இதனால், வைரஸ் அடர்த்தி குறையும். வெளியே சென்று ஒருவர் வீட்டிற்குள்ளே வந்தால் அவர்கள், குளித்து விட்டு, வாய் கொப்பளிக்க வேண்டும். பல் மருத்துவத்தில் பல் அடைத்தல், சுத்தம் செய்தல், பல் கட்டுதல் என இந்த மாதிரி சிகிச்சைகள் செய்யும்போது, பல் திறந்து வைத்திருப்பதால், வாயில் இருந்து கிருமிகள் காற்றில் எல்லா இடத்திலும் பரவி விடும்.

இதனால்தான், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் பல் மருத்துவ சிகிச்சை அளிக்க கூடாது. மஞ்சள், பச்சை பகுதிகளில் இருக்கும் மருத்துவர்கள் பல் வீக்கம், தாடை வீக்கம், ரத்தம் வழிதல் போன்ற முக்கியமான அவசர சிகிச்சைகளை மட்டும் செய்ய வேண்டும். மற்றபடி வாயை திறந்து வைத்திருக்க கூடிய பல் சிகிச்சைகளை செய்ய கூடாது என்று உலக சுகாதார மையம் மற்றும் ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது. அப்படி சிகிச்சை அளித்தால் பல் மருத்துவர்கள்தான் பாதிக்கப்படுபவர்களாக இருப்பார்கள்.

மேலும் முக்கியமாக, கடந்த 2 மாதங்களாக ஊரடங்கு இருப்பதால் வீட்டில் இருக்கும் பலருக்கு பல் வீக்கம், வலி, தாடை வீக்கம் உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது. பல் மருத்துவமனைகள் இயங்காமல் இருப்பதால் இந்த மாதிரி பிரச்னைகளுக்கு பலர் மருத்துவமனைகளுக்கு செல்ல முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இந்த மாதிரி மக்கள், பல் மருத்துவர்களை தொடர்பு கொண்டு, கூட்டம் இல்லாமல் சென்று சிகிச்சை பெறலாம். முழு உடல் கவசம் அணிந்துள்ள மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெற வேண்டும். மருத்துவர்களும் முழு பிபிஇ கிட் பாதுகாப்போடு சிகிச்சை அளிக்க வேண்டும். நோயாளிகளின் அளவை குறைத்து, முக்கியமான சிகிச்சைகளை மட்டும் அளிக்க வேண்டும். செவியலர்கள் மற்றும் மருத்துவ பணியாளர்களுக்கும் முழு பாதுகாப்பு வழங்க வேண்டும். .

மிக முக்கியமானதாக வாய் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சைக்கு செல்லாமல் உள்ளனர். அப்படி இருக்க கூடாது. கண்டிப்பாக சிகிச்சைக்கு செல்ல வேண்டும். விபத்தானவர்களும், வாய் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களும் கண்டிப்பாக சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனென்றால், கொரோனா 2 மாதத்தில் முடிய கூடிய விஷயமில்லை. இன்னும் பல மாதங்கள் ஆகும். எனவே மக்கள் பாதுகாப்போடு சிகிச்சை எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக வீடுகளில் அனைவரும் தள்ளி இருப்பது சரியானது. எச்சில் மூலமும் கொரோனா பரவுவதால் வெளியே சென்று வருபவர்களிடம் இருந்து தள்ளி இருப்பது நல்லது. பல் சுத்தம் செய்தல், செராமிக் பல் கட்டுதல் போன்றவற்றை தவிர்த்து, அவசர சிகிச்சைக்கு மட்டும் சென்றால் போதும். வாய் கொப்பளிப்பது மிகவும் முக்கியமானது. இவ்வாறு கூறினார்.



Tags : closure , Corona, maruttuvaman, dentist, doctor
× RELATED மண்டல காலம் நிறைவு சபரிமலை கோயில் நடை...