×

மீத்தேன் திட்டத்திற்காக ஆய்வா? வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் போர்வெல் போட மக்கள் எதிர்ப்பு: காரைக்குடி அருகே பரபரப்பு

காரைக்குடி:  மீத்தேன் திட்டத்திற்காக ஆய்வு நடந்ததாக எண்ணி, காரைக்குடி அருகே வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் போர்வெல் போட பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அருகே, கானாடுகாத்தானில் மானாவாரி வேளாண் ஆராய்ச்சி நிலையம் உள்ளது. இங்கு ஆயிரம் அடிக்கு போர்வெல் அமைப்பதற்காக ராட்சத இயந்திரம் நேற்று முன்தினம் வந்தது. இதை அறிந்த கானாடுகாத்தான், நேமத்தான்பட்டி, பள்ளத்தூர், கொத்தரி, சூரக்குடி, செட்டிநாடு, தேத்தாம்பட்டி, கொத்தமங்கலம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், போர்வெல் போட எதிர்ப்பு தெரிவித்து ஆராய்ச்சி மையம் முன்பு நேற்று திரண்டு எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்களை அதிகாரிகள் சமாதானம் செய்து, மனு பெற்றுக்கொண்டு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து காங்கிரஸ் முன்னாள் மாவட்ட தலைவர் துரைசிங்கம் கூறுகையில், ‘‘1,700 ஏக்கரில் அமைந்துள்ள கால்நடை பண்ணையின் ஒரு பகுதிதான் இந்த ஆராய்ச்சி மையத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த இடம் குறித்த வழக்கு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், ஆயிரம் அடிக்கு மேல் போர்வெல் போட ராட்சத இயந்திரத்தை கொண்டு வந்துள்ளனர். இந்த போர்வெல் கனிம வள சோதனைக்காகவா அல்லது மீத்தேன் சோதனைக்கா என எங்களுக்கு சந்தேகமாக உள்ளது. இந்த போர்வெல் தேவையில்லாதது. மீறி போட்டால் மக்களை திரட்டி எதிர்ப்பு தெரிவிப்போம்’’ என்றார்.  முன்னாள் சேர்மன் சிதம்பரம் கூறுகையில், ‘‘இப்பகுதியில் உள்ள வீடுகளில் 150 அடியில் போர்வெல் போட்டு உள்ளனர்.

வேளாண் நிலையத்தில் 1,000 அடிக்கு மேல் போர்வெல் போடும்போது மற்ற இடங்களில் உள்ள போர்வெல், கிணறுகளில் நீர்மட்டம் குறையும். கிராம மக்களை பாதிக்கும் இந்த திட்டம் தேவையற்றது’’ என்றார். வேளாண் ஆராய்ச்சி நிலைய தலைவர் மிட்டில்லா கிரேஷ் கூறுகையில், ‘‘நிலத்தடி நீர் சோதனைக்காக போர்வெல் போடப்பட உள்ளது. பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அவர்களின் மனு சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்படும்’’ என்றார்.

Tags : Parabharam ,Karaikudi ,Agricultural Research Station , Methane Project, Agricultural Research Station, Borewell, Karaikudi
× RELATED பெண் ஊழியர்களுக்கு பாலியல் டார்ச்சர் காரைக்குடி தாசில்தார் சஸ்பெண்ட்