×

வடமாநில தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு படையெடுப்பு: சாலை, வடிகால், குடிநீர் திட்ட பணிகள் முடக்கம்: மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

பெரம்பூர்: சென்னையில் மாநகராட்சி சார்பில் மழைநீர் வடிகால் பணி, கட்டிட பணி, சாலை பணி, குடிநீர் திட்ட பணி உள்ளிட்டவை ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்படுகின்றன. இவற்றில், வடமாநில தொழிலாளர்கள் அதிகளவில் ஈடுபடுத்தப்பட்டு வந்தனர். குறிப்பாக பீகார், ஒடிசா, மேற்கு வங்கம், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் சென்னை மற்றும் சுற்றுப்பகுதிகளில் குடும்பத்துடன் தங்கி, இந்த வேலைகளை செய்து வந்தனர். குறைவான சம்பளத்தில், அதிக நேரம் பணிபுரிவதால் வடமாநில தொழிலாளர்களை மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் அதிகளவில் பயன்படுத்தி வந்தர். இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதியில் இருந்து எந்த பணியும் நடைபெறாததால், வடமாநில தொழிலாளர்கள் வேலையிழந்து வறுமையில் தவித்தனர்.

இதனால், இவர்கள் கடந்த சில நாட்களாக தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை சென்னை சென்ட்ரலில் இருந்து 61 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு பல மாநிலங்களுக்கு வடமாநில தொழிலாளர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி, பல்லாயிரக்கணக்கான  வடமாநில தொழிலாளர்கள் சென்னையிலிருந்து வெளியேறியுள்ளனர். தற்போது, ஊரடங்கு தளர்வுக்கு பிறகு, கட்டுமான பணிகளை மேற்கொள்ள அரசு அனுமதித்துள்ள நிலையில், வடமாநில தொழிலாளர்கள் இல்லாததால், கிடப்பில் உள்ள பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னை மாநகராட்சியில் ஏற்கனவே தொடங்கப்பட்டு, ஊரடங்கு காரணமாக கிடப்பில் போடப்பட்ட சாலை சீரமைப்பு, மழைநீர் வடிகால், கழிவுநீர் கால்வாய் பணிகளை மீண்டும் தொடங்கி, முடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

உள்ளூர் ஆட்களை வைத்து வேலை செய்தால் அதிகம் பணம் செலவாகும் என்பதால், மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் என்ன செய்வது என தெரியாமல் தவித்து வருகின்றனர். சென்னை மாநகராட்சி திருவிக நகர் மண்டலத்துக்கு உட்பட்ட 73வது வார்டு டிக்காஸ்டர் சாலையில் பாதியில் நிறுத்தப்பட்ட மழைநீர் வடிகால் பணியை மீண்டும் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. கட்டுமான பணி பாதியில் நிற்பதுடன், அதற்காக தோண்டிய பள்ளங்களும் மூடப்படாமல் ஆபத்தான நிலையில் உள்ளது. தற்போது, அதிலிருந்து கழிவுநீர் வெளியேறி சாலையில் அடிக்கடி தேங்குவதால், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘‘பலகட்ட போராட்டங்களுக்கு பிறகு எங்கள் பகுதியில் மழைநீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.

இந்நிலையில் ஊரடங்கால் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நிறுத்தப்பட்ட பணிகள் இதுவரை தொடங்கவில்லை.  இதற்காக தோண்டப்பட்ட பள்ளமும் மூடப்படாமல் அபாயகரமாக உள்ளது. மேலும் அதிலிருந்து துர்நாற்றம் வீசி இந்த பகுதியில் பலருக்கு காய்ச்சலும் ஏற்படுகிறது. புளியந்தோப்பு பகுதியில் ஏற்கனவே கொரோனா தொற்று அதிகம் உள்ளதால்   சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்து உள்ளூர் ஆட்களை வைத்து இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்,’’ என்றனர்.


Tags : Invasion ,Northern Territory Workers: Road , Northern Territory Workers, Road, Drainage, Drinking Water Project, Corporation
× RELATED ஜே.பி.நட்டாவைத் தொடர்ந்து ஒன்றிய...