×

நீலகிரிக்கு பாலைவன வெட்டுக்கிளிகள் வரவில்லை: வேளாண் ஆராய்ச்சியாளர்கள் உறுதி

ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை என ஆய்விற்கு பின் கோவை வேளாண் பல்லைக்கழக பூச்சியியல் துறை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். பாகிஸ்தானில் இருந்து லட்சக்கணக்கில் இடம் பெயர்ந்த பாலைவன வெட்டுக்கிளிகள் தற்போது வட மாநிலங்களில் விவசாய நிலங்களை அழித்து வருகின்றன. பல ஏக்கர் பரப்பளவில் உள்ள விளைநிலங்களை துவம்சம் செய்து வரும் இந்த வெட்டுக்கிளிகளை அழிக்க முடியாமல் பாதிக்கப்பட்ட மாநில அரசுகள் திணறி வருகின்றன. இந்த வெட்டுக்கிளிகள் நீலகிரி மாவட்டம் மற்றும் கேரள மாநில எல்லைகளில் காணப்படுவதாக கூறப்பட்டது. இதைத்தொடர்ந்து தோட்டக்கலைதுறை இணை இயக்குநர் சிவசுப்ரமணியம் சாம்ராஜ் தலைமையில் ஆய்வு மேற்கொண்டதில், வெட்டுக்கிளிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வரவில்லை. இங்கு சாதாரண வெட்டுக்கிளிகளே  உள்ளன என தெரியவந்துள்ளது.நேற்று கோவை வேளாண் பல்லைக்கழக பூச்சியில் துறை தலைவர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில், வேளாண் பல்கலைக்கழக பேராசிரியர்கள் மற்றும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி பேராசிரியர்கள் கொண்ட குழுவினர் ஊட்டியில் உள்ள காந்தல் பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அங்குள்ள விவசாய நிலங்கள், சோலை மற்றும் புல்வெளிகளில் இந்த ஆய்வு நடந்தது.

ஆய்வின் முடிவில், வடமாநிலங்களை அச்சுறுத்தி வரும் பாலைவன வெட்டுக்கிளிகள் நீலகிரி மாவட்டத்திற்கு வரவில்லை என்றும், இங்கு வழக்கமான பச்சை வெட்டுக்கிளிகள் மட்டுமே காணப்படுவதாகவும் தெரிவித்தனர். இதுபற்றி ேகாவை வேளாண் பல்கலைக்கழக பூச்சியியல் துறை தலைவர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ‘‘இங்கு வடமாநிலங்களில் காணப்படும் பாலைவன வெட்டுக்கிளிகள் இல்லை. பொதுவாக பாலைவன வெட்டுக்கிளி, பாம்பே வெட்டுக்கிளி, புலம் பெயரும் வெட்டுக்கிளிகள் ஆகியவைகள் உள்ளன.  இங்குள்ள வெட்டுக்கிளி சாதாரண வெட்டுக்கிளிகளே. சில சமயங்களில் சிறு கொம்பு வெட்டுக்கிளிகள் சற்று பழுப்பு நிறுத்தில் காணப்படும்.  இதை பார்த்தே, வடமாநிலங்களில் காணப்படும் வெட்டுக்கிளிகள் என நினைத்து பலரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர். நீலகிரியில் உள்ளது சாதாரண வெட்டுக்கிளிகளே. இதனால், விவசாய பயிர்களுக்கோ அல்லது பொதுமக்களுக்கோ எவ்வித பாதிப்பும் இல்லை. எனவே, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எவ்வித அச்சமும் அடைய வேண்டாம்’’ என்றார்.

Tags : agronomists ,Nilgiris , No desert locusts , Nilgiris,agronomists,confirm
× RELATED நீலகிரி கூடலூர் அருகே யானை...