×

தமது அரசின் வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளால் நாடு விரைவான வளர்ச்சியை அடைந்து வருகிறது : பிரதமர் மோடி பெருமிதம்!!


டெல்லி : கொரோனா வைரஸ் தாக்குதலை இந்தியா திறம்பட எதிர்கொண்டு வருவதாக பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜ தனித்து 303 இடங்களை பிடித்து மீண்டும் ஆட்சியை பிடித்தது. பிறகு, பிரதமர் மோடி தலைமையில் 2வது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைத்தது. இந்த அரசு பதவியேற்று இன்றுடன் ஒரு ஆண்டு நிறைவடைகிறது. இந்த ஓராண்டு ஆட்சிக்கால சாதனைகளை விளக்கித் தன் வழக்கமான பாணியில், அனைத்து மொழிகளிலும் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி கடிதம் எழுதியிருக்கிறார்.

வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளால் நாடு விரைவான வளர்ச்சி

அந்த கடிதத்தில், கொரோனா தொற்றுக்கு எதிரான மிக நீண்ட போராட்டத்தில் வெற்றி பாதையை நோக்கி இந்தியா நடைபோட்டு வருவதாக பிரதமர் கூறியுள்ளார். என்றாலும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் கொரோனா தொற்றால் மிகப்பெரிய பாதிப்புகள் ஏற்பட்டு இருப்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார். கொரோனா பரவலை தடுக்க ஊரடங்கு நடைமுறையில் உள்ளதாலேயே மக்களுக்கு கடிதம் எழுத வேண்டிய சூழல் ஏற்பட்டதாகவும் பிரதமர் மோடி கூறியுள்ளார். கடந்த ஓராண்டில் தமது அரசு எடுத்த வரலாற்று சிறப்புமிக்க முடிவுகளால் நாடு விரைவான வளர்ச்சியை அடைந்து வருவதாக குறிப்பிட்டுள்ள அவர். தற்போது எதிர்கொண்டுள்ள சாவல்களையும் பிரச்னைகளையும் தீர்க்க மேலும் பட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டி உள்ளது என்று கூறியுள்ளார்.

இரவு பகல் பாராமல் உழைத்து வருகிறேன்

இரவு பகல் பாராமல் தாம் உழைத்து வருவதாகவும், தம்மை விட நாட்டு மக்கள் மீதும் அவர்களின் திறமைகள் மீதும் தமக்கு நம்பிக்கை உள்ளதாகவும் பிரதமர் அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுக்கு எதிரான போராட்டத்தில் உலக நாடுகளின் ஒற்றுமை ஆச்சரியம் அளிக்கக் கூடியதாக உள்ளது என்றும் இந்தியாவை பொறுத்தவரை பொருளாதார மீட்பு நடவடிக்கைகளில் பிற நாடுகளுக்கு உதாரணமாக விளங்கும் என்பதில் உறுதியான நம்பிக்கை கொண்டிருப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார். கொரோனாவால் எழுந்துள்ள பாதிப்புகள் பற்றி குறிப்பிட்டுள்ள அவர், எந்த ஒரு நபரும் பாதிக்கப்பட கூடாது என்பது தான் அரசின் நிலை என்று கூறியிருக்கிறார். மக்களின் சிரமங்களை முற்றிலுமாக போக்க மத்திய அரசு விரைந்து செயல்பட்டு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக உறுதி அளித்துள்ளார்.

இந்தியா மிகவும் பாதுகாப்பாக உள்ளது

தற்போது ஏற்பட்டுள்ள அசவுகரியங்கள், பேரிடராக மாறி மக்கள் அதனை எதிர்கொள்ள கூடாது என்பதை உறுதி செய்வதில் அரசு தீவிரமாக உள்ளது என்றும் பிரதமர் அந்த கடிதத்தில் கூறியுள்ளார். இதுவரை மத்திய அரசு அறிவித்த விதிமுறைகளையும் கட்டுப்பாடுகளையும் மக்கள் கடைபிடித்து வந்துள்ள நிலையில், தொடர்ந்து பொறுமையுடன் அரசின் கட்டுப்பாடுகளை பின்பற்ற வேண்டும்  என்றும் பிரதமர் கேட்டுக் கொண்டுள்ளார். உலக நாடுகளின் ஒப்பிடுகையில், இந்தியா மிகவும் பாதுகாப்பாக உள்ளது என்றும் கொரோனா தொற்றுக்கு எதிரான போர் குறித்து பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையிலும், இந்தியா போன்ற பல நாடுகள் கொரோனாவுக்கு பிந்தைய பொருளாதார மீட்சியை அடையும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

Tags : country ,Modi ,government , PM Modi, proud, corona, virus, folk, letter
× RELATED ம.பி.யில் ஆசியாவின் மிகப்பெரிய சோலார்...