×

சமூக இடைவெளியை கடைபிடிக்காததால் தி.நகர் ரங்கநாதன் தெருவில் 150 கடைகள் அதிரடி மூடல்: மாநகராட்சி நடவடிக்கை

சென்னை: தி.நகர் ரங்கநாதன் தெருவில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட  150க்கும் மேற்பட்ட கடைகளை மூட வேண்டும், என மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில், 4ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தியபோது, தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி, தமிழகம் முழுவதும் வணிக வளாகங்கள், தியேட்டர்கள், பெரிய கடைகள் உள்ளிட்ட கடைகளை தவிர்த்து தனிக் கடைகள் அனைத்தும் திறக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அப்படி திறக்கும்போது அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும், தொழிலாளர்கள் அனைவரும் மாஸ்க் அணிய வேண்டும், அடிக்கடி கைகழுவ வேண்டும் உள்ளிட்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது.

மேலும் விதிகளை பின்பற்றாத கடைகள் மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து சென்னை முழுவதும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி, விதிமீறி செயல்படும் கடைகளை மூடுவதற்கு உத்தரவிட்டு வருகின்றனர். இந்நிலையில், தி.நகர் ரங்கநாதன் தெருவில் உள்ள பல கடைகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும், ஊழியர்கள் முகக்கவசம் அணியாமல் உள்ளதாகவும் மாநகராட்சி அதிகாரிகளுக்கு புகார் வந்தது.  அதன்பேரில், அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தபோது, 150க்கும் மேற்பட்ட கடைகள் விதிமீறி செயல்படுவது தெரிந்தது. அவற்றை மூட வேண்டும் என்று சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும், மறு உத்தரவு வரும் வரை திறக்கக்கூடாது எனவும் எச்சரித்துள்ளனர்.

Tags : shops ,Ranganathan Street , Social Gap, The Nagar Ranganathan Street, Closure of 150 Stores, Corporation
× RELATED கடைகளும் இல்லை; வாங்கவும் ஆளில்லை தங்கம் இறக்குமதி 86% சரிவு