×

கொரோனா பரவலை தடுக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் மாற்று வழி

சென்னை: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் கால்களினால் லிப்ட்களை இயக்குவதற்கான மாற்று வழியை அறிமுகப்படுத்தியுள்ளது. சென்னையில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்தவாறு உள்ளது. இதனால், மற்ற மாவட்டங்களில் பேருந்து, ஆட்டோ உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் தொடங்கப்பட்ட போதிலும் சென்னையில் தடை செய்யப்பட்டுள்ளது.  இதேபோல், மெட்ரோ ரயில்  முழுவதும் குளிர்சாதன வசதியுடன் இயங்கும் சேவை என்பதால் ஜூன் மாதம் இறுதி வரை சென்னையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்காது என கூறப்படுகிறது.

நிர்வாக வசதிக்காக குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு தற்போது கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் தலைமை அலுவலகம் இயங்கி வருகிறது. சுழற்சி முறையில் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தநிலையில், கொரோனா பரவலை தடுக்க முழுவதும் கால்களினால் இயக்கும் லிப்ட்களை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதுகுறித்து மெட்ரோ ரயில்வே நிர்வாகம் தரப்பில் கூறியதாவது: கைகளால் தொடுவதன் மூலம் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. எனவே, கைகளினால் இயக்கப்படும் சிறிய, சிறிய பணிகளை மாற்று வழியில் இயக்க ஆலோசிக்கப்பட்டது. மேலும், வெவ்வேறு இடங்களில் இருந்து பயணிகள் நிலையங்களுக்கு வருவார்கள் என்பதால் அவர்கள் பயன்படுத்தும் லிப்ட்களை கைகளுக்கு பதில் கால்களால் பயன்படுத்துவதற்கு ஏதுவாக வடிவமைக்க திட்டமிடப்பட்டது.

அதன்படி, கைகளுக்கு பதில் கால்களாலேயே இயக்கும் லிப்ட்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொத்தான்களை கால்களால் அழுத்தினால் அவர்கள் எந்த தளத்திற்கு செல்ல வேண்டுமோ அங்கு செல்லலாம். இதன்மூலம், கைகளின் பயன்பாடு தடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே முதன்முறையாக சென்னை மெட்ரோ ரயில் நிர்வாக தலைமை அலுவலக கட்டிடத்தில் இந்த செயல்பாடு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த நடைமுறை அனைத்து நிலையங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.  இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Tags : Metro Rail Administration ,corona spread , Corona, Metro Rail Administration, Curfew
× RELATED கடந்த மாதத்தில் 86,15,008 பேர் மெட்ரோ ரயிலில் பயணம்