×

வெளிநாடு, வடமாநிலங்களில் இருந்து வந்து களியக்காவிளை செக்போஸ்டில் மணிக்கணக்கில் காத்து கிடந்த பயணிகள்

* தமிழக, கேரள அதிகாரிகள் இடையே தகவல் பரிமாற்றம் இல்லாததால் அவலம்

களியக்காவிளை:  தமிழக-கேரள அதிகாரிகளிடையே தகவல் பரிமாற்றம் இல்லாததால் களியக்காவிளை எல்லையில் மணிக்கணக்கில் பயணிகள் காத்து கிடந்தனர்.வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் கடந்த சில தினங்களாக விமானங்கள் மூலமும், டெல்லி, மும்பை உள்ளிட்ட இடங்களில் வசிக்கும் தென் இந்தியர்கள் ரயில்கள் மூலமும் சொந்த ஊருக்கு அழைத்து வரப்படுகின்றனர். நேற்று முன்தினம் இரவு துபாய், குவைத் நாடுகளில் இருந்து 2 விமானங்களில் திருவனந்தபுரத்திற்கு 500 பயணிகள் அழைத்து வரப்பட்டனர்.  விமான நிலைய வளாகத்திலேயே ஒவ்ெவாருவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு அவரவர் சொந்த மாவட்டங்களுக்கு கேரள அரசு பஸ்கள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர்.

 இதில் 41 பேர் குமரி, நெல்லை மாவட்டங்களை சேர்ந்தவர்கள். இந்த 41 பேரையும் ேநற்று காலை 2 கேரள அரசு பஸ்களில் ஏற்றிய கேரள சுகாதார துறை அதிகாரிகள்  களியக்காவிளை அடுத்த இஞ்சிவிளை பகுதியில் உள்ள கேரள செக்போஸ்ட்டில் இறக்கி விட்டு விட்டு சென்றனர். ஆனால் இது குறித்து எந்த தகவலையும் குமரி மாவட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை.  இதை தொடர்ந்து  டெல்லியில் இருந்து திருவனந்தபுரத்திற்கு வந்த ரயிலிலும் குமரி, நெல்லை மாவட்டத்தை சேர்ந்த 60 பயணிகள் வந்தனர். இவர்களுக்கும் ரயில் நிலையத்திலேயே சளி பரிசோதனை நடத்தப்பட்டு பின்னர் இஞ்சிவிளை பகுதியில் உள்ள கேரள செக்போஸ்ட் அருகே இறக்கி விட்டு சென்றனர்.

இந்த பயணிகள் அங்கிருந்து நடந்து களியக்காவிளை செக்போஸ்ட் அருகே நேற்று வந்தபோது தமிழக அதிகாரிகள், தமிழக அரசின் இ-பாஸ் இருந்தால் மட்டுமே அனுமதிக்க வேண்டும் என கூறினர். இதையடுத்து, செக்போஸ்ட் அருகே  நின்று அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதில் கர்ப்பிணி பெண் மற்றும் 15 குழந்தைகள் அமரவும் வழியில்லாமல் மிகவும் அவதிக்குள்ளாகினர்.  மதியம் தக்கலை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றனர்.

அப்போது, அதிகாரிகள், இவர்கள் குறித்த விவரம் எதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை, இப்படி தினமும் நூற்றுக்கணக்கானவர்கள் வந்தால் முன்னேற்பாடுகள் செய்வதற்கும் பல சிரமங்கள் உள்ளது என தெரிவித்தனர். இதையடுத்து டிஎஸ்பி ராமச்சந்திரன் எஸ்பி, கலெக்டருடன் போனில் ஆலோசனை நடத்தினார். இதைதொடர்ந்து ஒவ்வொருவருக்கும் சுகாதார அதிகாரிகள் சளி பரிசோதனை நடத்தப்பட்டு ஒரு ஆம்புலன்ஸ்சில் 4 பேர் வீதம் நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பகுதிகளுக்கு தனிமைபடுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டனர்.


Tags : Travelers ,Northern Territories ,Kalikkavalai Checkpoint ,passengers , Abroad, Northern Territories, Kaliyakavil, Checkpost
× RELATED உகாண்டாவில் பயங்கரம்: 2 வெளிநாட்டு பயணிகள் சுட்டு கொலை