×

தீபா, தீபக் இரண்டாம் நிலை வாரிசல்ல ஜெயலலிதாவின் நேரடி வாரிசுதான்: சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம்.

சென்னை: தீபா, தீபக் ஆகியோர் ஜெயலலிதாவின் 2ம் நிலை வாரிசு அல்ல, நேரடி வாரிசுதான் என்று சென்னை உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.  முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான போயஸ் கார்டன் உள்ளிட்ட சொத்துகளை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க கோரி கே.கே.நகரை சேர்ந்த அதிமுக உறுப்பினர் புகழேந்தி என்பவரும் ஜானகிராமன் என்பவரும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, மனுதாரருக்கு வழக்கு தொடர அதிகாரம் இல்லை என அறிவித்து வழக்கை தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து புகழேந்தி மற்றும் ஜானகிராமன் ஆகியோர் மேல்முறையீடு செய்தனர்.

இந்த மேல் முறையீடு வழக்கு நீதிபதிகள் என்.கிருபாகரன், அப்துல் குத்தூஸ் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா மற்றும் அவரது சகோதரர் தீபக் ஆகியோரை எதிர் மனுதாரர்களாக சேர்க்க உத்தரவிட்டனர். இதையடுத்து, தீபா, தீபக் ஆகியோர் தங்களை ஜெயலலிதாவின் சட்டபூர்வ வாரிசுகளாக அறிவிக்க கோரி தனித்தனியாக மனு தாக்கல் செய்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கடந்த 27ம் தேதி தீர்ப்பளித்தனர். தீர்ப்பில், ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகவில்லை என்பதால் அவரின் சொத்துகளுக்கு அவரது அண்ணன் ஜெயக்குமாரின் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர் தான் இரண்டாம் நிலை வாரிசு என்று உத்தரவிட்டனர்.

மேலும், வாரிசுகள் உள்ள நிலையில் ஜெயலலிதாவின் சொத்துக்களை நிர்வகிக்க தனி நிர்வாகியை நியமிக்க 3ம் நபர் கோர முடியாது என அறிவித்து புகழேந்தி, ஜானகிராமன் ஆகியோரின் மனுக்களை தள்ளுபடி செய்தனர். இந்நிலையில், இந்த உத்தரவில் நீதிபதிகள் நேற்று சிறு விளக்கம் அளித்துள்ளனர். அதில், இந்து வாரிசுரிமை சட்டம் பிரிவு 15(2)(எ)ன்படி ஜெயலலிதா அவரது தாயிடம் இருந்து பெற்ற சொத்துகளுக்கும், பிரிவு 15(1)(பீ)ன்படி ஜெயலலிதா சம்பாதித்த சொத்துகளுக்கும்  தீபா, தீபக் தான் நேரடி வாரிசு. எனவே, 27ம் தேதியிட்ட தீர்ப்பில் இரண்டாம் நிலை வாரிசு என்பதை மாற்றி வாரிசு என்று உத்தரவிடுகிறோம் என்று தீர்ப்பளித்தனர்.

ஜெ. வீடு: தீபாவுக்கு நீதிபதிகள் அறிவுரை
ஜெயலலிதா வாரிசு வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, நீதிபதிகளிடம் அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயண் ‘போயஸ் கார்டன் வீட்டை அரசு கையகப்படுத்துவது குறித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இந்த உயர் நீதிமன்ற தீர்ப்பு வந்ததும், தீபா தன் கணவருடன் போயஸ்கார்டன் வீட்டுக்கு சென்று அங்கு பிரச்னை செய்தார்’ என்றார். அதற்கு தீபாவின் வக்கீலிடம் நீதிபதிகள் விளக்கம் கேட்டனர். அதற்கு தீபாவின் வக்கீல் ‘தீபா வீட்டை பார்க்க சென்று இருக்கலாம். ஆனால், சட்டவிரோதமாக எந்த ஒரு செயலிலும் ஈடுபடவில்லை. பிரச்னையும் செய்யவில்லை’ என்றார். இதை கேட்ட நீதிபதிகள், ‘ஜெயலலிதாவின் வாரிசுகள் என்று தீபா, தீபக்கை இந்த நீதிமன்றம் அறிவித்துள்ளது. எனவே, ஜெயலலிதாவின் சொத்துகளை எடுப்பது தொடர்பாக அரசு சட்டம் இயற்றினால், அதை எதிர்த்து நீதிமன்றங்களை நாடி நிவாரணம் பெறவேண்டும்’ என்று அறிவுரை வழங்கினர்.

Tags : Deepa ,Deepak ,Jayalalithaa ,Madras High Court , Deepa, Deepak, Jayalalithaa, direct heir, Madras High Court
× RELATED ஜெயலலிதாவுக்கு சொந்தமான நகைகளை...