பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டது செங்கை மாவட்டம் ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா உறுதி

செங்கல்பட்டு: சென்னை புறநகர் பகுதிகளான பல்லாவரம், பரங்கிமலை, தாம்பரம், செம்பாக்கம், அனகாபுத்தூர், பம்மல், சிட்லாக்கம், மீனம்பாக்கம், மேடவாக்கம், பெருங்களத்துர், பீர்க்கன்காரணை ஆகிய பகுதிகளில் மக்கள் நெருக்கம் மிகுந்து காணப்படுகிறது. இதையொட்டி, நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகிறது.

தமிழகத்தில் சென்னை முதலிடமும், செங்கல்பட்டு மாவட்டம் 2வது இடத்திலும் உள்ளது. நேற்று ஒரே நாளில் 61 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால், பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்தை தொட்டுவிட்டது. 444 பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில், நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் ஊரடங்கை கடுமையாக கடைபிடிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது. 4ம் கட்ட ஊரடங்கு 31ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் ஊரடங்கு நீடிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். திருப்போரூர்: குன்றத்தூர் அடுத்த திருமுடிவாக்கத்தை சேர்ந்த வாலிபர், தனியார் ரசாயன தொழிற்சாலையில் வேலை செய்தார். கடந்த 20 நாட்களுக்கு முன் அவர், உடல்நிலை பாதிக்கப்பட்டு கேளம்பாக்கத்தில் உள்ள செட்டிநாடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அப்போது அவருக்கு, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இந்த பரிசோதனையில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதியானது. இதையடுத்து அவர், கொரோனா சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டார். ஆனால் அவர், சிகிச்சை பலனின்றி நேற்று மதியம்  இறந்தார். கேளம்பாக்கம் அடுத்த புதுப்பாக்கம் கிராமம், எம்ஜிஆர் நகரை சேர்ந்த கணவன், மனைவிக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர்களுக்கு செங்கல்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதற்கிடையில், அவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரித்தபோது, இருவரும் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்தது தெரிந்தது. இதையடுத்து அவர்கள் வேலை செய்த அடுக்குமாடி குடியிருப்பில் யாருக்கேனும் கொரோனா தொற்று உள்ளதா என அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

Related Stories:

More
>