×

இறக்கை கட்டி பறக்கிறது இந்தியா ஆசியாவில் முதலிடம் உலகளவில் 9ம் இடம்: பலியிலும் சீனாவை முந்தியது

புதுடெல்லி:  கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகள் பட்டியலில் ஆசியாவில் முதலிடத்தையும், உலகளவில் 9ம் இடத்தையும் இந்தியா பிடித்துள்ளது. பலியில் சீனாவையும் முந்தி்யது.  நான்காம் கட்ட தேசிய ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் வழங்கப்பட்டதில் இருந்தே இந்தியாவில் கொரோனா பாதிப்பு கடுமையாக அதிகரித்து வருகிறது.  கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 7,466 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று தெரிவித்தது. ஒரே நாளில் 7,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்படுவது இதுவே முதல் முறை. மேலும், கடந்த 22ம் தேதி முதல் தினமும் புதிதாக பாதிக்கப்படுவோர் 6,000க்கும் அதிகமாகவே இருந்து வருகிறது. இதனால், இந்தியாவில் நேற்று மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்து 799 -த்தை எட்டியது.

இதன் மூலம், கொரானோவால் மோசமாக பாதிக்கப்பட்ட ஆசிய நாடுகளில் இந்தியா முதலிடத்தையும், உலக அளவில் 9வது இடத்தையும் பிடித்துள்ளது. இதன்மூலம், 1 லட்சத்து 60 ஆயிரத்து 979 பேர் பாதிப்புடன் உள்ள துருக்கியை இந்தியா முந்தி உள்ளது. உலக அளவிலான பட்டியலில் அமெரிக்கா 17 லட்சத்து 68 ஆயிரத்து 461 பேர் பாதிப்புடன் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்தடுத்த இடங்களில் பிரேசில், ரஷ்யா, ஸ்பெயின், இங்கிலாந்து, இத்தாலி, பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் உள்ளன. இதே போல், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் நாடு முழுவதும் 175 பேர் பலியாகி உள்ளனர். இதனால், பலி எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது. இதன் மூலம், கொரோனாவின் ஆரம்ப புள்ளியான சீனாவை இந்தியா முந்தியுள்ளது. முதல் முறையாக கொரோனாவால் தாக்கப்பட்ட சீனாவில் 84,106 பேர் பாதிக்கப்பட்டு, 4,638 பேர் பலியாகினர். இந்த பலி எண்ணிக்கையை இந்தியா முந்தி உள்ளது.

குணமாவோர் சதவீதம் உயர்வு
இந்தியாவில் தற்போது 42.89 சதவீதம் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். மொத்தம் 71,105 பேர் கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்துள்ளனர். கடந்த வாரம் இது 40 சதவீதமாக இருந்தது. தற்போது, பாதிக்கப்பட்டவர்களில் 89,897 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று காலை 9 மணி வரையிலான புள்ளி விவரங்களின்படி, 34 லட்சத்து 83 ஆயிரத்து 838 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 21,702 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன. பாதிப்பிலும் பலி எண்ணிக்கையிலும் மகாராஷ்டிரா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.


Tags : India ,Asia ,China , India, World, China
× RELATED லடாக்கில் சர்ச்சைக்குரிய பகுதியில்...