×

கொரோனா ஊரடங்கால் பல ஆயிரம் கோடி வர்த்தகம் காலி: கந்தலாகிப் போனது ஜவுளித்துறை

* ஒதுக்கியது எல்லாம் வெற்று அறிவிப்பு
* ஒட்டுமொத்த இழப்புக்கு யார் பொறுப்பு?

இந்தியாவில் மிகப்பழமையான தொழில்துறைகளில் ஒன்று ஜவுளித்துறை. நாட்டின் பொருளாதாரம், வேலை வாய்ப்பு,  ஏற்றுமதியில் இதன் பங்களிப்பு அதிகம். 2018-19 நிதியாண்டில் இந்தியாவின் ஜவுளி ஆடைகள் ஏற்றுமதி 3,870 கோடி டாலர் (சுமார் 2,94,120 கோடி) கடந்த நிதியாண்டில், நவம்பர் வரை ஏற்றுமதி மதிப்பு 2,295 கோடி டாலராக ( 1,74,420 கோடியாக இருந்தது. பல்வேறு பிரச்னைகளுக்கு நடுவே போட்டி போட்டு தொழிலை நடத்தி வந்தாலும், பெரிய அளவில் ஏற்றம் இல்லை. பண மதிப்பு, ஜிஎஸ்டி தொடங்கி பல்வேறு வகையில் இந்த தொழில் ஆட்டம் கண்டு விட்டது.  இந்த ஆண்டாவது, ஏற்றம் தரும் ஆண்டாக இருக்கும் என்று எதிர்பார்த்தவர்கள், கொரோனா ரூபத்தில் பெரும் ஏமாற்றத்துக்கும் அதிர்ச்சிக்கும் ஆளாகி விட்டனர்.

இந்திய அளவில் ஏராளமானவர்களின் வாழ்க்கைக்கு ஆதாரமாக விளங்கும் இந்த துறையில், தமிழகத்துக்கு முக்கிய இடம் உள்ளது. சர்வதேச பின்னலாடை உற்பத்தியில் திருப்பூர் மாநகரம் முக்கிய பங்கு வகிக்கிறது. இங்கிருந்து, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பருத்தி சார்ந்த கோடை கால உடை, குளிர்கால உடை என பருவ நிலைக்கு ஏற்ற ஆடைகள் அதிகளவு ஏற்றுமதி செய்யப்படுகிறது. திருப்பூர் பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் உள்நாடு, வெளிநாடுகளுக்கு கடந்த ஆண்டு 46 ஆயிரம் கோடிக்கு மேல் வர்த்தகம் செய்துள்ளன. இத்துறையில், 8 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாகவும், 5 லட்சம் தொழிலாளர்கள் மறைமுகமாகவும் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். கொரோனா வைரஸ் தொற்றால், பல்வேறு உலக நாடுகள் திருப்பூர் நிறுவனங்களுடன் கொண்டிருந்த ஏற்றுமதி வர்த்தக தொடர்பை கடந்த மார்ச் முதல் துண்டித்துக் கொண்டன. இதனால், உற்பத்தி செய்த ஆடைகளைஏற்றுமதி செய்ய முடியவில்லை. ஆடைகள் தேக்கம் அடைந்துள்ளதால், பல ஆயிரம் கோடி ரூபாய் முடங்கிக் கிடக்கிறது.

 ஊரடங்கால் மூடப்பட்டிருந்த நிலையில், கடந்த 6ம் தேதி முதல் சமூக இடைவெளியுடன் 50 சதவீதம் தொழிலாளர்களுடன் தொழில் நிறுவனங்கள் இயங்க மாநில அரசு அனுமதி வழங்கியது. ஆனாலும், அரசின் பல்வேறு விதிமுறைகள் நீடிப்பதால், இங்கிருந்து வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆடைகளை அனுப்ப முடியவில்லை. தொடர் தேக்கத்தால் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆலைகளை திறக்க அனுமதி அளித்தும், பொருட்களை முழு வீச்சில் உற்பத்தி செய்ய முடியாமல் பின்னலாடை உரிமையாளர்கள் தவிக்கின்றனர். ஏதாவது நிவாரணம் கிடைக்குமா என்று ஏங்கிய நிலையில், ₹20 லட்சம் கோடிக்கான சிறப்பு சலுகை திட்டங்களை மத்திய அரசு அறிவித்தது. இதனால், ஜவுளித்துறையில் எந்த மாற்றமும் ஏற்படாது. இது வெற்று அறிவிப்பு என திருப்பூர் பின்னலாடை உரிமையாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ‘‘தொழில் நிறுவனங்களுக்கு, வங்கிகள் பிணையின்றி கடன் வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால், இதுதொடர்பான வழிகாட்டுதல்கள் எதுவும் வங்கிகளுக்கு இதுவரை வரவில்லை என்கின்றனர். தொழில் நிறுவனங்களை புனரமைக்க, நீண்டகால கடன் திட்டத்தின்கீழ் நிதி வழங்கவேண்டும். குறைந்தபட்சம் 6 மாதம் அசல், வட்டியை வசூலிக்கக்கூடாது.  பையர்கள் நிலுவையின்றி பணம் செலுத்தினால்தான், பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் வங்கியிடம் கடன்தொகையை திருப்பிச்செலுத்த முடியும்’’ என்றார். திருப்பூர் நிட்டிங் நிறுவன உரிமையாளர்  கோபி கூறுகையில், ‘‘ஏற்கனவே வங்கிக் கடன் வாங்கியவர்கள் மட்டுமே, மத்திய அரசு திட்டத்தால் பயன்பெற வாய்ப்புள்ளது.  புதிதாக கடன் கிடைக்காத நிலை உள்ளது.

பனியன்  தொழில்துறைக்கு தனியாக ஒரு வாரியம் அமைத்து, செயல்பாட்டுக்கு கொண்டு  வந்தால் மட்டுமே குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் பயன்பெற  வாய்ப்பு உள்ளது’’ என்றார்.  ஈரோடு கிளாத் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ரவிச்சந்திரன் கூறுகையில், ‘‘ஜனவரியில் இருந்தே ஜவுளி வியாபாரம் மோசமாக உள்ளது. கொரோனா ஊரடங்கு பாதிப்பை தீவிரம் ஆக்கி விட்டது. வங்கிகள் கடன் வசூலை ஒத்திவைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. ஆனால், தனியார் வங்கி நிர்வாகங்கள் மிரட்டியே கடன் தொகையை வசூலிக்கின்றனர். அரசின் அனைத்து திட்டங்களும் பெரிய முதலீட்டாளர்களை மட்டுமே மையப்படுத்தி உள்ளது.

எனவே, ஜவுளித்துறையில் உள்ள சிறு உற்பத்தியாளர்கள், வணிகர்களுக்கு எவ்வித பயனும் கிடைக்க வாய்ப்பு மிகச்சிறிய நிறுவனங்கள் கடன் பெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. உதாரணமாக, மத்திய அரசின் முத்ரா திட்டத்தில் ஜவுளித்துறையினர் பெரும்பாலானோர் பயன்பெற முடியவில்லை. கடன்களின் மேல் 15 முதல் 20 சதவீதம் டாப்அப் லோன் மட்டும் வாங்கிக்கொள்ளலாம் என்று தனியார் வங்கிகள் கூறுகின்றன’’ என்றார்.
 இது ஒருபுறம் இருக்க, இந்த துறை நிறுவனங்களில் பணியாற்றிய பெரும்பாலான தென்மாவட்ட தொழிலாளர்கள், கொரோனா தொடங்கியபோதே குடும்பத்துடன் சொந்த ஊர்களுக்கு  சென்றுவிட்டனர். இவர்கள் திரும்பி வர, பஸ் வசதி இல்லை. 80 சதவீத  தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு சென்றுவிட்டதால் பின்னலாடை உற்பத்தி  நிறுவனங்களை முழுமையாக இயக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தொழிலாளர்களின்  வருகை, புதிய ஆர்டர் ஆகியவற்றை பொறுத்தே தொழிலின் எதிர்காலத்தை முடிவு செய்ய இயலும். அரசின் அறிவிப்புகளால் எந்த பயனும் இல்லை எனும்போது, மீள வழி கிடைக்குமா என்பதே கேள்விக்குறியாக இருக்கிறது என நொந்து போய் கூறுகின்றனர் பின்னலாடை மற்றும் ஜவுளி உற்பத்தி துறையினர்.

அரசு அறிவித்த வெத்துவேட்டு சிறிய நிறுவனங்களுக்கு பூட்டு
இந்திய ஜவுளித்துறை மோசமானதற்கு மாசு பிரச்னையும் முக்கிய காரணம். ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி உற்பத்தி தொழிற்சாலைகளின் கழிவு நீரை சுத்திகரிக்க பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும் என்று அரசு அறிவிப்பு செய்து பல ஆண்டு ஆகியும் இன்னும் திட்டம் தொடங்கப்படவில்லை. இதன் விளைவு, ஜவுளி உற்பத்தி நிறுவனங்கள் ஒவ்வொன்றாக மூடப்பட்டு வருகின்றன. ஈரோட்டில் தொடக்கத்தில் 1000 பிராசசிங் யூனிட்டுகள் இருந்த நிலையில் தற்போது 100 மட்டுமே செயல்படுகின்றன என ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.

சிபில் ஸ்கோர் எப்படி... கடன் கிடைக்கும் அப்படி
தேசியமய வங்கிகளின்  கூட்டமைப்பு பொறுப்பாளர்கள் கூறுகையில், ‘‘குறு, சிறு மற்றும் நடுத்தர  தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்குவது குறித்து இதுவரை மத்திய  அரசிடமிருந்து எவ்வித வழிகாட்டுதல்களும் வரவில்லை. கடன் வழங்குவதில்  வழக்கமான நடைமுறைகளையே பின்பற்றி வருகிறோம். சிபில் ஸ்கோர் முறையாக  இருக்கும்பட்சத்தில் தொழில் நிறுவனங்களுக்கு மீண்டும் கடன் வழங்க  முன்னுரிமை வழங்கப்படும்’’ என்றனர்.

காத்திருக்கும் அபாயம்
* அடுத்த 3 மாதங்களுக்கு சில்லறை விற்பனை பாதியாக குறைய வாய்ப்பு.
* ஆர்டர்கள் 25% -30% சரிந்துள்ளது. ஆர்டர், உற்பத்தி, விற்பனை இல்லாவிட்டால் 30% நிறுவனங்கள் மூடப்படலாம்.
* ஒரு கோடி பேர் வேலை பறிபோக வாய்ப்பு
* ஏற்றுமதிக்கு வழியின்றி உற்பத்தி ஜவுளிகள் தேக்கம். பல ஆயிரம் கோடி முடக்கம்
* ஊருக்கு போன 80% தொழிலாளர்கள் திரும்பவில்லை; திரும்பி வர பஸ் வசதி இல்லை.
* கடன் தர வங்கிகள் தயக்கம், அரசின் அறிவிப்பால் பலனில்லை.

நிலையற்ற நூல் விலை அடுக்கடுக்காய் கவலை
ஈரோடு மாவட்டத்தில் கிரே, லுங்கி, துண்டு, ஜமக்காளம், பெட்ஷீட் என ஜவுளி ரகங்கள் உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்து 7 ஆயிரம் நிறுவனங்கள் செயல்படுகின்றன. 45 ஆயிரம் விசைத்தறிகள் செயல்படுகின்றன. ஆண்டு ஒன்றுக்கு ரூ.7,500 கோடிக்கு ஈரோடு மாவட்டத்தில் ஜவுளி வர்த்தகம் நடைபெறுகிறது.  ஈரோடு மாவட்டத்தில் இருந்து ஆண்டுக்கு 1,000 கோடிக்கு ஜவுளி ஏற்றுமதி நடக்கிறது. நிலையற்ற நூல் விலை, மாசு பிரச்னை, ஜி.எஸ்.டி., வெளிமாநில ஜவுளி ஆர்டர்கள் குறைவு இப்படி அடுக்கடுக்கான பிரச்னைகளில் சிக்கி தவித்து வந்த ஜவுளி உற்பத்தியாளர்களுக்கு கொரோனா ஊரடங்கானது ஜவுளித்துறையை முற்றிலும் முடக்கி போட்டுவிட்டது. மத்திய அரசு அறிவித்துள்ள 20 லட்சம் கோடி ஊக்க திட்டமானது ஜவுளித்துறைக்கு எந்த வகையிலும் பயன் அளிக்காது என்கின்றனர் ஜவுளி உற்பத்தியாளர்கள்.

ரக ஒதுக்கீடு சட்டம் தேவையா?
கைத்தறி நெசவுக்கு என்று ரக ஒதுக்கீடு சட்டம் உள்ளது. இதன்படி வேட்டி, துண்டு, லுங்கி, ஜமக்காளம், பெட்ஷீட், சில சேலை ரகங்கள் விசைத்தறியில் தயாரிக்க அனுமதி இல்லை. நவீனம், புதிய தொழில்நுட்பம் பற்றி பேசும் மத்திய அரசு, ரக ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து விசைத்தறிக்கு உத்வேகத்தை கொடுக்கவேண்டும் என்பதும் முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

கடைசியில் மக்களுக்கு பூஜ்யம் தானா?
20,00,000,00,00,000  - என்னாது இது,  தெரியுதுல்ல. கொரோனா வைரஸ் பயங்கரம் வர்க்க பேதம் இல்லாமல் ஏழை, நடுத்தரவர்க்கம், என நடுத்தெருவுக்கு கொண்டு வந்துவிட்டது. கார்ப்பரேட் முதல் பெட்டிக்கடை வரை முடங்கிவிட்டது. இவர்களை காப்பாற்ற மத்திய அரசு அறிவித்ததுதான் இந்த பெருந்தொகை. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஐந்து நாளாக அறிவித்த சலுகைகள் அந்தந்த துறையினருக்கு போய் சேர்ந்ததா...சேருமா? சிறு, குறு தொழில் நிறுவன உரிமையாளர்கள், விவசாயிகள் மகிழ்ச்சியா? சைபர் எண்ணும் ேபாது தலைசுற்றும்; கடைசியில்...? பலதரப்பட்ட துறைகளின் உண்மை நிலை குறித்த ஒரு வேதனை தொடர்.

Tags : The Textile Industry Corona , Corona, Curfew, Trade, Textile
× RELATED இந்திய ஜனநாயக தேர்தல்களில் வெற்றியை தீர்மானிக்கும் சின்னங்கள்