×

ஊரடங்கு முடிந்தாலும் பீதி குறையாது பஸ், ரயில்களில் ஏறவே மக்கள் பயப்படுவார்கள்: சைக்கிள், நடராஜா சர்வீசுக்குதான் முக்கியத்துவம்

புதுடெல்லி: ஊரடங்குக்குப் பிறகும் மக்களிடம் இருக்கும் கொரோனா பீதி போகாது. அதனால், ஊரடங்கு முடிந்தாலும் அடுத்த 6 மாதத்துக்கு ரயில், பஸ் போன்ற அரசு போக்குவரத்தை மக்கள் பயன்படுத்துவது வெகுவாக குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா ஊரடங்குக்குப் பிறகான மக்களின் போக்குவரத்து பயன்பாடு குறித்து அறிவியல் மற்றும் சுற்றுச்சூழல் மையம் ஆய்வு நடத்தியது. டெல்லி மற்றும் என்சிஆர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 400க்கும் மேற்பட்ட நடுத்தர மற்றும் உயர் வருவாய் பிரிவினர் உள்ளடக்கியோரிடம் இது தொடர்பாக கருத்துகள் கேட்கப்பட்டன. இந்த ஆய்வில், போக்குவரத்து விஷயத்தில் மக்களின் மனநிலையில் பெரும் மாற்றம் பிறந்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஊரடங்குக்குப் பிறகு சுமார் 6 மாதத்திற்கு பொது போக்குவரத்து பயன்பாடு பெருமளவில் குறையும் என ஆய்வில் தெரியவந்துள்ளது. கொரோனா பரவும் பீதிதான் இதற்கு காரணம். இதனால், உயர்தர பொது போக்குவரத்து, நடந்து செல்லுவது, சைக்கிளில் செல்லுவது, தேவையற்ற நெடுந்தூர பயணங்களை தவிர்ப்பது என்ற முடிவுக்கு மக்கள் வந்துள்ளனர். குறைந்த தூர பயணங்களுக்கு பஸ், புறநகர், மெட்ரோ ரயிலில் செல்வதை விட வாடகை கார், ஷேர் பைக் போன்ற வசதிகளை பயன்படுத்த மக்கள் முடிவு செய்துள்ளனர். இதனால், அடுத்த 6 மாதத்திற்கு மெட்ரோ ரயிலில் பயணிப்போர் எண்ணிக்கை 37 சதவீதத்தில் இருந்து 16 சதவீதமாக சரியும் என ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

தற்போது சொந்த வாகனம் இல்லாத 36 சதவீதம் பேரில் 28 சதவீதம் பேர் பாதுகாப்பு கருதி விரைவில் புதிய வாகனம் வாங்க முடிவு செய்துள்ளனர். உயர்தர பொது போக்குவரத்து வசதிகள் இருப்பின் அவற்றில் பயணிக்க தயார் என 73 சதவீதம் பேர் கூறி உள்ளனர். 22 சதவீதம் பேர் சொந்த வாகனத்தில் மட்டுமே செல்வதாக கூறுகின்றனர். எனவே இனி வரும் காலங்களில் சொகுசான பயணத்தை காட்டிலும் சுகாதாரமான பாதுகாப்பான பயணத்திற்கே மக்கள் முன்னுரிமை அளிப்பார்கள் என ஆய்வின் முடிவுகள் கூறுகின்றன.

ஊரடங்கு முடிந்த பிறகு மக்கள்...
* ேதவையற்ற பயணத்தை தவிர்ப்பார்கள்.
* அதிகளவில் சைக்கிளில் செல்வார்கள்.
* நடந்து செல்ல முக்கியத்துவம் தருவார்கள்.
* மெட்ரோ ரயில் பயணம் 16%-மாக சரியும்.
* 28% பேர் புதிதாக வாகனம் வாங்குவார்கள்.
* 22% மக்கள் சொந்த வாகனத்தில் செல்வார்கள்.
* வாடகை கார், ஷேர் பைக்குக்கு மவுசு வரும்.



Tags : Curfew, buses, trains, bicycles
× RELATED கடந்த 10 வருடங்களில் கேரளாவுக்கு...