×

போயஸ் இல்லத்துக்கு நான் செல்லக்கூடாது என்று யாருக்கோ உள்நோக்கம் இருக்கிறது; ஜெ.தீபா பேட்டி

சென்னை: போயஸ் இல்லத்துக்கு நான் செல்லக்கூடாது என்று யாருக்கோ உள்நோக்கம் இருக்கிறது என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். போயஸ் தோட்ட சாலை அனைவருக்கும் பொதுவானது. வேதா நிலையம் மட்டும் அல்ல ஜெ.வின் அனைத்து சொத்துக்களுக்கும் நாங்களே வாரிசு. என்ன நடந்தாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் எனவும் கூறினார். தீபா, தீபக் ஆகியோர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகள் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2-ஆம் நிலை வாரிசுகளாக அறிவித்திருந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பில் திருத்தம் செய்தது.

ஜெயலலிதாவுக்கு திருமணம் ஆகாததால் அண்ணன் மகள், மகனை நேரடி வாரிசாக அறிவித்து தீர்ப்பில் திருத்தம் மேற்கொண்டதாகவும் சென்னை உயர்நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது. இந்த தீர்ப்பை அடுத்து சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த ஜெ. தீபா கூறியதாவது; நீதிமன்றம் இன்று பிறப்பித்த தீர்ப்பை நாங்களே எதிர்பார்க்கவில்லை. நீதிமன்ற உத்தரவு இல்லாமல் நான் வேதா இல்லத்துக்குச் செல்ல மாட்டேன். தமிழக அரசு எங்கள் மீது வீண் பழி சுமத்துகிறது. வேதா இல்லத்துக்கு நாங்கள் வரக் கூடாது என்பதில் யாருக்கோ அவசியம் இருக்கிறது.

எங்களுக்கு முழு அதிகாரத்தையும் உயர் நீதிமன்றம் வழங்கியிருப்பதை நான் மனதார வரவேற்கிறேன். நீதிமன்ற தீர்ப்பை அதிமுகவினர் தலைவணங்கி ஏற்க வேண்டும். தங்களுக்கு அச்சுறுத்தல் இருப்பதால், எங்களது பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் தீபா கூறியுள்ளார். வேதா இல்லம் குறித்து தமிழக அரசு இயற்றிய சட்டம் குறித்து ஆளுநரிடம் முறையிடுவேன் என்றும் தீபா கூறியுள்ளார். அதிமுகவினருக்கு எதிராக கேள்வி எழுப்புவதால் என்னை குறிவைக்கிறார்கள். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.


Tags : Someone ,J. Deepa ,house ,Boise , Boise House, Motivation, Interview with J. Theba
× RELATED உதகை அருகே பைக்காரா படகு இல்லம் 15 நாட்கள் மூடல்