×

வேலூர் மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக திகழும் பாலாற்றில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடக்கம்

வேலூர்: வேலூர் மாவட்ட பாலாற்றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. கர்நாடக மாநிலம் நந்திமலையில் உள்ள சிக்கபல்லாபுரம் என்ற பகுதியில் பாலாறு உற்பத்தியாகிறது. கர்நாடகாவில் 93 கி.மீ தூரம், ஆந்திராவில் 33 கி.மீ தூரம் பயணிக்கும் இந்த பாலாறு தமிழ்நாட்டில் திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த புல்லூர் கிராமம் வழியாக திருப்பத்தூர், வேலூர்,  ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்கள் வழியாக 222 கி.மீ தூரம் செல்கிறது. இதன்மூலம் இம்மாவட்டங்கள் குடிநீர், மற்றும் விவசாயம் செழிக்கிறது.

வேலூர் மாவட்டத்தில் உள்ள 1 லட்சத்து 10ஆயிரத்து 600 ஏக்கர் விவசாய நிலங்களில் இந்த பாலாற்றின் நீராதாரத்தின் அடிப்படையில் விவசாயம் செய்யப்பட்டு வந்தது. விவசாயத்தை வேரோடு அழிக்கும் வகையில் மணல் கொள்ளை இரவு, பகலாக நடக்கிறது. மேலும் மணல் குவாரிகளாலும் நிலத்தடி நீர் அதலபாதாளத்திற்கு சென்றுவிட்டது. மணல் சுரண்டியதால் சீமைக்கருவேல மரங்கள் ஆக்கிரமிப்பு தொடங்கி காடுபோல் வளர்ந்துள்ளது. எனவே எங்களின் வாழ்வாதாரமான பாலாற்றை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது பலதரப்பட்ட மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதையடுத்து ‘பாலாறு பாதுகாப்போம்’ செயல்திட்டத்தின் மூலமாக பாலாற்றில் வளர்ந்துள்ள சீமைக் கருவேல மரங்களை அகற்றும்படி தாசில்தார்களுக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவிட்டார். அதன்பேரில் சத்துவாச்சாரி பாலாற்றில் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணி இன்று காலை தொடங்கியது. தாசில்தார் ரமேஷ் தலைமை தாங்கினார். வருவாய் ஆய்வாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். விஏஓ கனகராஜ், உதவியாளர்கள் கஜேந்திரன், ராஜன், மாயகிருஷ்ணன் மற்றும் குழுவினர் கருவேல மரங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தாசில்தார் ரமேஷ் கூறுகையில், கலெக்டர் சண்முகசுந்தரம் உத்தரவின்பேரில் பாலாறு பாதுகாப்போம் செயல்திட்டத்தின் மூலமாக பாலாற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது. வேலூர் தாலுகாவிற்கு உட்பட்ட அன்பூண்டியில் இருந்து பெருமுகை வரை 16 கி.மீ தூரத்திற்கு பாலாற்றில் உள்ள சீமைக் கருவேல மரங்கள் முழுமையாக அகற்றப்படும். இந்த பணியில் 10 பொக்லைன் இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகிறது. 3 நாட்களில் இந்த பணிகள் முடிக்கப்படும், என்றார். இதேபோல், விரு தம்பட்டு பாலாறு பகுதியில் தாசில்தார் பாலமுருகன் தலைமையில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



Tags : Sikkimuruwel ,Palakkad ,Cheemakuruwel ,Vellore district ,Vellore , Vellore, Cheemakuruwel trees, Removal work
× RELATED கோடை வறட்சி எதிரொலி: ஆறுகள், அணைகள் வற்றின